ரோமாபுரிப் பாண்டியன்
119
தொடங்கியது. மரம் சாய்கிற பயங்கரச் சத்தம் அந்தக் காடு முழுவதும் எதிரொலித்தது. முத்துநகை நடுங்கிவிட்டாள். வெட்டுண்ட மரமும் அவளை நோக்கியா சாய்ந்திட வேண்டும்? மரம் தன்மேல் தான் விழப்போகிறது எனக்கண்ட முத்துநகை 'ஓ' வென்று அலறிக் கீழே விழுந்து விட்டாள்.
பெண் குரல் கேட்டு, மரம் வெட்டியவன் தீப்பந்தத்துடன் ஓடி வந்தான்; நல்ல வேளையாக மரம் அவளுக்கு மிக அருகிலேயே விழுந்திருந்தது. கொஞ்சம் தவறியிருந்தாலும் முத்துநகையின் உடல் நொறுங்கிப் போயிருக்கும். தீப்பந்தத்தைக் கீழே செருகிவிட்டு, அந்த மரம்வெட்டி அவளைத் தூக்கினான். அவளும் பயத்தோடு கண்களைத் திறந்து பார்த்தாள்.
"முத்து! முத்து! இந்நேரத்தில் எங்கு வந்தாய்?" என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்கு விஷயம் விளங்கி விட்டது. யாராயிருக்கும் என்று எதிர்பார்த்து வந்தாளோ அவனையே கண்டாள்.
அவனாக இருக்கக் கூடாதா என்று அடங்காத ஆவலுடன் ஓடி வந்தவள், 'ஏன் அவனைக் கண்டோம்' என்று பயந்தாள்.
"இந்நேரத்தில் ஏன் மரம் வெட்டுகிறாய்?" - முத்துநகை அவனைப் பார்த்துக் கேட்டாள். பெண் குரலிலே அல்ல; தான் புதிதாகக் கற்றுக் கொண்ட ஆண் குரலில்.
விறகு வெட்டியாக நின்று கொண்டிருக்கும் இருங்கோவேளுக்கு ஆண் குரலில் அவள் பேசுவதைக் கேட்டதும் ஆச்சரியமாகப் போய்விட்டது. ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல், அவளைப் பார்த்து. "இலட்சியம் நிறைவேறாமல் பேசுவது இல்லை என்றாய்; இப்போது பேசி விட்டாயே!" என்று கேட்டான்.
"என் இலட்சியம் நிறைவேறும் நிலையில் இருக்கிறது. எப்படியும் வெற்றி எனக்குத்தான் என்று நிச்சயமாகி விட்டது. அதனால் தைரியமாகப் பேச ஆரம்பித்து விட்டேன்!" என்று பதில் கூறினாள் முத்துநகை.
"உன் இலட்சியமென்ன? அது இந்தக் காட்டுக்குள்ளே தான் உலவிக் கொண்டிருக்கிறதா?" இருங்கோவேள் கேட்டான்.
"ஆமாம்" என்றாள் அவள்.
இருங்கோவேள் அதற்குமேல் அதைக் கிளற விரும்பவில்லை. 'எப்படியும் தாமரை அவளை மரமாளிகைக்கு அழைத்துவரப் போகிறாள். வந்த பிறகு சிறிது சிறிதாக அவளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்' என்ற முடிவில், பேச்சின் பாதையைத் திருப்பினான்.