ரோமாபுரிப் பாண்டியன்
11
றன. அதுவும் வரலாற்று அடிப்படையான நவீனங்கள் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தில் புறப்பட்டு வருகின்றன. என் தந்தையார் பிறந்த நூறாவது ஆண்டு 1974. இந்தத் தகுதி ஒன்றைப் பற்றியே நான் இந்த நூலை வெளியிடத் தகுதி உள்ளவன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் தமிழில் இலக்கியச் சரித்திரத்தின் நவீனகர்த்தாக்கள் மூவரில் ஒருவராக அவர் இருந்தார் என்பது சிறிதேனும் ஐயமில்லாமல் ஏற்பட்டுவிட்டது. அவரைக் குறித்து நான் சிறப்பாகப் பேசுவது தகுதியல்ல.
இப்போது இந்த வரலாற்றுச் சான்றாக உள்ள நவீனத்திற்கு என்ன இலக்கணம் என்று சிறிது ஆராயவேண்டும். இதை எழுதிய டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இன்னின்ன வரலாற்றுச் சான்றுகளைக்கொண்டு இந்த 'ரோமாபுரிப் பாண்டியன்' என்ற நவீனத்தை நான் கற்பனை செய்து சிருஷ்டித்தேன் என்று காட்டியிருக்கிறார். உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். சர் மார்டிமர் வீலர் என்ற புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் ஒருவர் இருந்தார். அவர் புதுச்சேரிப் பக்கத்தில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் உலாவும்போது அகஸ்டஸ் சீசருடைய பொன் நாணயங்கள் சில ஒரு புதையலில் கிடைத்தன. அது இம்முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மற்றொரு செய்தி முன்னுரையில் குறிப்பிடப்படவில்லை. அதாவது ஒரு பானையின் ஒரு பாகம் என்று கூறுவார்களே, அதுவும் கிடைத்தது. ரோமாபுரியில் அகஸ்டஸ் சீசர் ஆண்ட காலத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் முத்திரை அதில் இருந்தது. அதைப் பார்த்து சர் மார்டிமர் வீலர் மிகவும் வியப்படைந்ததாக எழுதியிருக்கிறார். அதாவது நாவாய்ப் போக்குவரத்து, வணிகம் இவைகள் எல்லாம் ரோமாபுரிக்கும், தமிழகத்திற்கும் மிகமிக விரைவாகவும், மிகமிகச் சுறுசுறுப்பாகவும் அந்தக் காலத்தில் நடந்தன என்பது ஐயமின்றித் தெளிவாகின்றது. ஆகவே, வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டுதான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்த நூலில் எழுதப்பட்டிருக்கிற பெருவழுதிப் பாண்டியன் என்பவன்தானா ரோமாபுரிக்குச் செழியன் என்பவனைத் தூது ஆக அனுப்பினான்? இதற்கு வரலாற்றுச் சான்று என்ன? என்று கேட்கக்கூடாது. ஏன் என்றால் வரலாற்றுச் சான்றுகளைத் தழுவிய நவீனத்திற்கு, ஆசிரியனுக்கும் கற்பனைக்கும் ஒரு இடம் கொடுக்கவேண்டும். கற்பனைக்கு இடம் கொடுக்காவிட்டால் அது வரலாற்றுப் புத்தகமாகி விடுமேயொழிய நவீனமாகி விடாது. ஆகவே முதல் இலக்கணம் என்னவென்றால் வரலாற்றுச் சான்றுகள் இருக்கவேண்டும். ஆனால் கற்பனையும் இருக்கவேண்டும். விளக்கமாக, ஜூனோ என்ற அகஸ்டஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எகிப்தில் ஒரு யவனக் கிழவரிடம் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசியதாக இதில் இருக்கிறது. இதற்கு எங்கே வரலாற்றுச் சான்று என்று நீங்கள் கேட்கக்கூடாது. நடந்திருக்கக்கூடியதுதான். அதை கலைஞர் கற்பனை செய்திருக்கிறார். நடந்திருப்பதுடன் அது ஒத்திருப்பதால் அதை நாம் ஏற்க வேண்டும்.