உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

137


செய்வது? அண்ணனுக்கு ஏற்பட்டிருக்கும் மனக் குழப்பங்களில் தானும் ஒரு புயலைக் கிளப்பிவிட்டால் அவரால் தாங்கிக் கொள்ள இயலுமா?"

மெதுவாக நடந்தவாறே, அண்ணியின் படுக்கையின் பக்கம் சென்றாள். அரசிக்குச் சற்று இருமல் அதிகமாயிற்று. பணிப்பெண்கள் அரிசியிடம் விரைந்தோடி சிகிச்சைகளில் ஈடுபட்டனர். தாமரையும் அண்ணியைத் தன் மார்பின் மீது சாய்த்துக் கொண்டு இருமல் அதிகத் தொல்லை கொடுக்காமல் தடவிக் கொடுத்தாள்.

அரசியின் இருப்பிடத்தையொட்டி வேறோர் இடத்தில் படுத்திருந்த முத்துநகையின் காதில் இருமல் ஒலி விழுந்தாலும் அவள் அதற்காக எழுந்து வராமல் தூங்குவது போலவே படுத்திருந்தாள்.

நீண்ட நேரம் அரசியை இருமல் வாட்டி வதைத்துப் பிறகு சிறிது அடங்கிற்று.

"சாவும் என்னைக் கொண்டு போகத் தாமதிக்கிறது!" என்று கண்கலங்கக் கூறினாள் அரசி.

"அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் அண்ணி! நீங்கள் சாகமாட்டீர்கள்; சாகக்கூடாது; சாக விடமாட்டோம்" என்று குரல் தழுதழுக்கக் கூறினாள் தாமரை.

இந்தச் சோக நிகழ்ச்சியைச் செவி கொடுத்துக் கவனித்தவாறே தன் கண்களில் அரும்பிய கண்ணீரை துடைத்துக் கொண்டாள் முத்துநகை. பெண்கள் அழுவதைப் பெண்களால் பொறுத்துக் கொள்ள முடியாது தான். அதற்காகப் பகைவன் வீட்டுப் பெண்களின் அழுகையைக் கண்டு மனம் தளரலாமா? முத்துநகையின் உள்ளத்தைக் கெட்டிப்படுத்த - உறுதியாக்கிட எழுந்த எண்ணங்களுக்கும் - இரக்க சுபாவத்திற்கும் பெரும் போராட்டமே நடைபெற்றது. ஒரு கணம் கடமையுணர்வு ஜெயிக்கும். மறுகணம் இரக்க இதயம் ஜெயிக்கும். இப்படித் திண்டாடிக் கொண்டு படுத்திருந்தாள் அவள். மீண்டும் அரசி கடுமையாக இருமத் தொடங்கினாள். மூச்சு நின்று விடுமோ என்கின்ற அளவுக்கு இருமல் பலமாக இருந்தது.

முத்துநகை படுக்கையை விட்டெழுந்து அரசியின் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அவள் பார்த்ததை யாரும் கவனிக்கவில்லை. அரசி தாங்க முடியாமல் துடித்துத் துவள்வதையும், அவளோடு தாமரையும் துவண்டு துவண்டு விழுவதையும் கண்டு குடும்பப் பாசத்தின் உயர்வை எண்ணிக் கலங்கினாள்.

"அய்யோ! இந்தக் குடும்பத்துக்கு இப்படியொரு கஷ்டமா? இவர்கள் அரண்மனையிலே இருந்தால் இந்நேரம் ஆயிரம் வைத்தியர்கள் வந்திருப்பார்களே !" என்று வருந்தினாள்.