ரோமாபுரிப் பாண்டியன்
149
"மன்னித்துக் கொள்ளவும். இதுபோல நமக்கு ஒரு நிலை ஏற்பட்டு விட்டால்... என்று சிந்திப்பதுதான் முறையண்ணா" என்று கெஞ்சும் தோரணையில் கூறினாள் தாமரை.
"நமக்கு ஒரு நிலை! பைத்தியக்காரி, இனிமேல் தானா நமக்கு அந்த நிலை ஏற்பட வேண்டும்? இப்போது நம் நிலை என்ன? அதை எண்ணிப்பார், தாமரை! எண்ணிப்பார்! முகிலைத் தொடும் அளவு எழுந்து நின்ற நமது கோட்டை எங்கே? கொத்தளங்கள் எங்கே? கொலு மண்டபத்தில் உன் அண்ணன் வீற்றிருந்த காட்சி எங்கே? அத்தனையும் மறைவதற்குக் காரணமாயிருந்த இந்த எதிரிகளின் மீது இரக்கமாம் - கருணையாம் பரிவாம் பச்சாதாபமாம்!" இருங்கோவேள் எரிமலையானான்.
"கரிகாற் சோழர்தானே அண்ணா நமது எதிரி- பாண்டியர்களுக்கும் நமக்கும் என்ன பகை?"
தாமரையின் கேள்விக்கு இருங்கோவேள் பதில் சொல்வதற்கு முன்பு அவன் உதடுகள் துடித்தன. பல்லைக் கடித்துக் கொண்டான்.
"பாண்டியன் பகைவனல்ல என்கிறாயா? இதோ இந்தப் பாவி இல்லையென்றால் இந்நேரம் அந்தக் கரிகாலன் உயிர் காற்றில் பறந்திருக்குமே - அதைத் தடுத்து நிறுத்தியது இவன் தானே? அது மட்டுமல்ல தாமரை; இதோ ஒரு புதிய செய்தி சொல்லுகிறேன் உனக்கு! இன்னும் இரண்டொரு தினங்களில் பாண்டிய நாட்டுப்படை நம்மை இந்தக் காட்டுக்குள் வளைக்கப் போகிறது. பெரும் சேனை கொண்டு முற்றுகையிட்டு என்னையும் உன்னையும், ராஜ குடும்பத்தையும் கைது செய்து, இவர்களையெல்லாம் விடுவிக்க வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறது."
இதை அவன் சொல்லி முடிப்பதற்குள் தாமரைக்கு நடுக்கம் ஏற்பட்டு விட்டது. பாண்டியர்கள் படையெடுக்கப் போகிற செய்தி தந்த பயத்தைவிட, அந்தச் செய்தியை செழியன் எதிரிலேயே அண்ணன் வெளியிடுகிறானே என்ற பயம் அதிகமாயிற்று அவளுக்கு. ஆனால் அந்த பயம் வெகு விரைவில் நீங்கிற்று. செழியன் காதில் அந்தச் செய்தியைப் போட்டதுங்கூட அண்ணனின் ராஜதந்திரந்தான் என்ற முடிவுக்கு வந்தாள்.
இருங்கோவேள் செழியனிடம் சென்று முதுகில் தட்டியவாறு. "உணர்ச்சி மிக்க வாலிபனே! உனக்கும் எனக்கும் ஏற்பட்டிருக்கிற நெருக்கடியைத் தீர்க்கக்கூடிய சக்தி இப்போது உன்னிடந்தான் இருக்கிறது. என்ன நெருக்கடி என்று கேட்கிறாயா? நீ கேட்க மாட்டாய்! புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவன்தான் நீ! பெருவழுதிப்