உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

161


மோதிரத்தையே போட்டிருக்கக்கூடிய ஒருவன் நடந்து செல்லும் போது சாதாரண வீரனாகிய அவன் மட்டும் குதிரையில் ஏறிச் செல்லலாமா? நடந்து கொண்டே முத்துநகை பேச்சுக் கொடுத்தாள்.

"நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமில்லையா?"...

"ஆமாம் ஆமாம்"

"ஓலையைக் கொடுத்தால்.. அந்தப்பாண்டியர்கள்."

"படையெடுக்க மாட்டார்களாம்!"

"அது தெரியும்; அது தெரியும். ஆமாம்; நீ எவ்வளவு நாட்களாக நமது மன்னரின் படையில் வேலை பார்க்கிறாய்?"

"எங்க தாத்தா காலத்திலிருந்து எங்க குடும்பமே இருங்கோவேள் மன்னரின் படையிலேதான் இருக்கிறது!"

"ஓகோ! நீ வாள் வித்தையில் சிறந்தவன்தானா?"

"ஏதோ கொஞ்சம் தெரியும்!"

"பார்த்தாலே தெரிகிறது, பெரிய வீரன்தான் என்று. எங்கே, உன் வாளைக் கொடு பார்ப்போம்!"

கொடுங்கோல், தன் வாளையெடுத்து மரியாதையுடன் முத்துநகையிடம் கொடுத்தான்; முத்துநகை நடந்து கொண்டே அந்த வாளை வாங்கித் திருப்பிப் பார்த்தாள்.

"அதிகக் கனமாக இல்லையே!"... இது முத்துநகை

"ஆமாங்க! நம் அரசர் வைத்திருக்கும் வாள்தான் அதிகக் கனம். கரிகால் சோழனுடைய வாளைவிட அதிகக் கனமானது!" இது கொடுங்கோல்.

"ஓ! அப்படியா?" என்று கூறிக் கொண்டே முத்துநகை கையிலிருந்த வாளைக் கொடுங்கோலின் நெஞ்சில் நுழைத்து விட்டாள். எதிர்பாராமல் தாக்கப்பட்ட கொடுங்கோல், வாளிலே தன் உடலைச் சிக்க வைத்துக் கொண்டு மண்ணில் வீழ்ந்தான். அவசர அவசரமாக அவன் உடைகளை ஆராய்ச்சி செய்தாள் முத்துநகை. அந்த ஓலை அவள் கையில் கிடைத்துவிட்டது; எடுத்துப் படித்துப் பார்த்தாள். திடுக்கிட்டாள். அவளுக்குப் பயம் வேறு பிடித்துக் கொண்டது. எதிரே கிடக்கும் கொடுங்கோலின் பிணத்தை இழுத்துப் புதர் மறைவில் பரபரப்புடன் கிடத்தினாள். ஆளில்லாமல் நின்ற குதிரையை இழுத்துக் கொண்டு போய் வேறிடத்தில் விட்டாள். தன் குதிரையில் ஏறிக் கொண்டு எங்கு போவதென்று தெரியாமல் கொஞ்ச தூரம் சென்றாள்.