உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

169


"ஆம் அண்ணா! ஆம்! பச்சிலைகள் பறித்து வருவதாகப் போன வரைக் காணவில்லை. அண்ணிக்கு எப்போது மருந்து கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன்."

"ஒரு சோகமான செய்தி சொல்லுகிறேன் கேள்!"

"என்ன அண்ணா?"

"அவனைக் காட்டிலே ஒரு புலி கொன்று விட்டது."

"ஆ! உண்மையாகவா...? அண்ணா! அண்ணா!"

தாமரை மயக்கமடைந்து விழுந்துவிட்டாள். இருங்கோவேள் ஓடிச்சென்று அவளுக்குச் சிகிச்சைகள் செய்து மயக்கம் தெளிவித்து உட்கார வைத்தான். தாமரையின் கண்களில் தாரை தாரையாக நீர் கொட்டியது.

"எப்படியண்ணா அந்தக் கொடுமை நடந்தது?" அவளுக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது.

"என் கண் முன்னாலேயே அவன் கொல்லப்பட்டான். அவன் உடலைக் கூடக் கீழே எறியாமல் புலி தூக்கிக் கொண்டு ஓடி விட்டது"

"அய்யோ! அண்ணா!"

தாமரை. தலையைச் சுவரில் முட்டிக்கொண்டு கோவெனக் கதறி அழத் தொடங்கினாள்.

"தாமரை! என்ன இது? எத்தனையோ வீரர்களை -தளகர்த்தர்களைப் போரிலே இழந்துவிட்டு இங்கே உட்கார்ந்திருக்கிறோம். அப்போதெல்லாம் உன்னை இப்படி அழ வைக்காத நிகழ்ச்சி இப்போது மட்டும் நடந்துவிட்டதா என்ன? ஒரு சாதாரண ஊமை மருத்துவனுக்காகவா இப்படி அலறுகிறாய்?"

"அண்ணா! அண்ணா!" -தாமரையின் கதறல் அதிகமாயிற்று.

"நிறுத்து தாமரை நிறுத்து! முட்டாளே! நீ ஏன் அழுகிறாய் என்று எனக்குத் தெரியும்! அந்த மருத்துவன் உன்னை மயக்கி விட்டான்."

"அண்ணா!" தாமரை இருங்கோவேளிடம் ஓடிவந்து அவன் காலில் விழுந்தாள். "என்னை மன்னித்து..." என்று விம்மி விம்மி அழுதாள். வார்த்தையை முடிக்காமல் அவன் பாதங்களைக் கண்ணீரால் குளிப்பாட்டினாள்.

"அந்த மருத்துவன் யார் தெரியுமா? அவனிடம் உன் மனத்தைப் பறிகொடுத்தாயே பைத்தியக்காரி! அவன் நமது எதிரி! பகைவர்கள் அனுப்பிய ஒற்றன்!"