ரோமாபுரிப் பாண்டியன்
171
கட்டளையை நிறைவேற்றுவதற்காகக் கரிகாலனின் மாளிகையில் நுழைந்தாள். கரிகாலனைத் தனியாகச் சந்தித்தால் அவனைக் கொன்று வீழ்த்திவிட்டுச் சோழ மண்டலத்தையே தன் காலடியின் கீழ்க் கொண்டு வரவேண்டுமென்று யார் மனக்கோட்டை கட்டியிருக்கிறானோ, அவனுக்குச் சாதகமாகச் சோழநாட்டு சுடர்க்கொடியாம் முத்துநகை சோழப் பேரரசனிடம் பேசுவதற்குப் போய்க் கொண்டிருந்தாள்.
எப்படியும் பாண்டியனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி யாக வேண்டும் என்ற துடிப்பு கரிகாலனுக்கு மிகுந்திருந்தது. தன் நாட்டுக்கு வந்தவன் மட்டுமல்ல. தன் உயிரையே மீட்பதற்குக் காரணமாக இருந்த செழியனைக் காப்பாற்ற வேண்டியது தலையாய கடமையெனக் கொண்டான். அவன் நினைத்தால் இருங்கோவேள் எங்கே ஒளிந்திருந்தாலும் அந்த இடத்தோடு அவனை அழித்து ஒழித்துவிடமுடியும். அத்துணை ஆற்றலும், படை வலிமையும் பெற்றிருக்கிறான். ஆயினும் முத்துநகையின் கருத்துக்கு அவன் மதிப்பளித்துக் காத்திருந்தான்.
அதே போல் புலவர் காரிக்கண்ணனார் கூறிய வார்த்தைகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டியவைகளாகவே அவனுக்குத் தோன்றின. செழியனை உயிரோடு விடுவிப்பது தான் இலட்சியம் என்கின்றபோது ஆர்ப்பாட்டமான போராட்டம் அதற்குப் பயன்படாது என்பது, காரிக்கண்ணனார் அவனிடம் முதலில் எடுத்துச் சொன்ன வாதம். அதன்படி வேறு வழிகளில் முயற்சி எடுக்க முனையும்போது முத்துநகை குறுக்கிட்டுத் தானே அந்தக் கடமையை மேற்கொண்டு, திறம்பட முடிப்பதாக வாக்குறுதி அளித்து அவனை அமைதிப்படுத்திவிட்டாள். இதற்கிடையே பெருவழுதிப் பாண்டியன் செழியனை மீட்கும் முயற்சியில் இறங்கியிருப்பதும், அதற்கெனப் படை அனுப்பியிருப்பதும் இன்னும் கரிகாலனுக்குத் தெரியாது.
நிம்மதியற்ற உள்ளத்தோடு சோழன், தன் மாளிகையில் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தான். உத்தரவிட்ட நேரத்தில் பாய்ந்து சென்று படையழிக்கும் சக்தி வாய்ந்த படைகளிருந்தும், சுட்டு விரல் அசைத்தால் எட்டுத் திக்கும் முரசுகொட்டி வெற்றிக்கொடி ஏற்றிக் காட்டும் வீரர்கள் காத்திருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் சோழப் பெருவேந்தன் குழப்பமுற்றிருந்தான். இருங்கோவேளைப் பிணமாக்கிப் போடவேண்டுமென்றால் ஒரு நொடிக்குள் நடந்துவிடும்.
ஆனால் செழியன்? அவனை எப்படி மீட்பது ? கேள்விக் குறிகள் நெஞ்சத்தில் ஒன்று பத்து நூறாக முளைத்தன. ஏதாவது ஒரு முடிவு கண்டேயாகவேண்டும் என்று கரிகாலன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கி விட்டான். இளவயதில் அவன் இருந்த இடத்திற்குத் தீ மூட்டியபோது எப்படி வெளியேறுவது என அங்குமிங்கும் ஓடினானே, அப்போது கூட