உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

கலைஞர் மு. கருணாநிதி


"என்ன சொல்கிறாய்?" என்று அரசன் வியப்புடன் கேட்டான்.

"ஆம் அரசே! அந்த யவனக் கிழவன்தான் இருங்கோவேள்! இத்தனை நாளும் தங்களிடம் மறைத்து வைத்திருந்த உண்மையை இப்போது வெளியிட்டுத் தீர வேண்டிய நேரம் வந்து விட்டது. என் தந்தை காரிக்கண்ணனார் இருங்கோவேளின் உற்ற நண்பர். சோழ நாட்டுக்குத் துரோகி. இருங்கோவேளும் என் தந்தையும் இரவு நேரங்களில் வெகு நேரம் பேசிச் சதித் திட்டங்கள் வகுத்ததை நானே நேரில் கண்டிருக்கிறேன். இதோ இந்தப் பதக்கத்தைப் பாருங்கள். என் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போன யவனக் கிழவரிடமிருந்து கீழே விழுந்த பதக்கம் இது. இதில், 'இருங்கோவேள்' என்ற எழுத்துக்களைப் பாருங்கள். இன்னும் என்ன சான்று வேண்டும் அரசே? மகளே தன்னுடைய தந்தையைத் துரோகியென்று கூறுகின்ற அற்புதத்தைக் கண்டு திகைக்கிறீர்களா?" என உணர்ச்சிப் பொறி பறக்க முழங்கினாள் முத்துநகை.

கரிகாலன் அலட்சியத்தோடு பலமாகச் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்து, "பைத்தியக்காரி! இருங்கோவேள் இப்போது உன் வீட்டில் இல்லை. என் வீட்டில்தான் இருக்கிறான். பகைவன் அமர்ந்திருப்பது பாட்டுத் தந்தையின் வீட்டில் அல்ல! நாட்டுத் தந்தையின் வீட்டில்! துரோகத்துக்குத் துணை போவது உன் தந்தையல்ல - நீயே தான்!" என்று கூறினான்.

அது கேட்டு முத்துநகை துடித்துவிட்டாள், "அரசே! என் தூய்மையைச் சந்தேகிக்காதீர்கள்!" என்று அவன் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறத் தொடங்கி விட்டாள்.

"முத்துநகை! விரைவில் விளக்கம் பெறுவாய்! வா என்னோடு! நீ அழைத்து வந்துள்ள ஒற்றர் வீரபாண்டியைச் சந்திக்கலாம்" என அவளை அழைத்துக் கொண்டு கரிகாலன் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

ஒற்றரைச் சந்திப்பதற்கான இடம் ஏற்பாடாயிற்று, வட்ட வடிவமான அந்த இடம் பளிங்குக் கற்களால் அமைந்திருந்தது. யானைத் தந்தங்கள் பொருத்தப்பட்ட அழகிய கதவுகள் - அதில் இடையிடையே தங்கத்தால் ஆன குமிழ்கள்! சுவர்களின் ஓரத்தில் பட்டுத் திரைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தத் திரைக்குப் பின்னால் ஓங்கிய வாளுடன் வீரர்கள் நிற்பதை யாரும் கவனிக்க இயலாது. நடுவே இரண்டொரு வெள்ளி இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பழங்களும் கனிச்சாறும் இருக்கைகளுக்கு நேரே வைக்கப்பட்டிருந்தன.

இரண்டு வீரர்கள் ஒற்றரை மிக்க மரியாதையுடன் அழைத்து வந்து இருக்கையொன்றில் அமர வைத்தனர். சற்று நேரத்துக்கெல்லாம் அரசரும் முத்துநகையும் அங்கு வந்து சேர்ந்தனர். அரசரைக் கண்ட ஒற்றர்