226
கலைஞர் மு. கருணாநிதி
226 உ கலைஞர் மு. கருணாநிதி எழுதி வைத்த அந்த எழுத்துக்களைக் கண்டு அவள் அலறிக் கீழே சாய்ந்த காட்சி அவனை ஓர் உலுக்கு உலுக்கும். அதே சமயம் அரசியின் பயங்கர இருமலும் அந்த இருமலினிடையே, “என் ராஜாவின் இலட்சியத்தை நானும் நிறைவேற்றுவேன்" என்று அரசி கூறுவதும், அவன் இதயத்தை உசுப்பும். கரிகாலனின் உருவம் எதிரே வந்து நின்று "அடே! இருங்கோவேள்! என்னை உன் சூழ்ச்சி ஒன்றும் செய்யாது!" என்று நகைமுழக்கம் செய்வது போலிருந்தது. தாமரை போன பிறகு இருங்கோவேள் மனைவியின் கால் பக்கம் போய் அமர்ந்து, அவள் கால்களைத் தடவிக் கொண்டே இருந்தான். முரட்டுக் குணம் படைத்த அவன் இதயத்திலிருந்து கிளம்பிய சோகப் பெருவெள்ளம் கண்களின் வழியே உடைப்பெடுத்து ஓடிக் கொண்டி ருந்தது. அரசி திடுக்கிட்டு எழுந்தாள். கால்களை வருடிக் கொண்டிருக்கும் கணவனின் கரங்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவனை அப்படியே ஆரத்தழுவி அவன் கால்களில் தன் தலையை வைத்துக் கொண்டாள். ஒருவருக்கொருவர் பேசாமலே தங்கள் உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் இருங்கோவேள் அரசியை ஒழுங்காகப் படுக்க வைத்துவிட்டு அவள் கன்னத்தை வருடிவிட்டு அந்த அறையினின்றும் வெளியேறினான். அரசியும் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தாள். வெளியேறிய இருங்கோவேள், முத்துநகை பூட்டப்பட்டிருந்த அறையின் வழியாகச் சென்று அங்குள்ள பலகணியில் எட்டிப்பார்த்தான். அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பின்னர் அங்கிருந்து தன் மாளிகைக்குச் சென்று கட்டிலில் தடால் என விழுந்து உறங்குவதற்கு முயற்சி செய்தான். மாளிகையின் உள்ளும் புறமும் நடுநிசியின் பயங்கர அமைதி குடிகொண்டிருந்தது. அரசி மட்டும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். மெல்லப் பலகணி வழியே, வெளியே எட்டிப் பார்த்தாள். ஒரே அமைதி! காற்றில் மரங்கள் அசைந்து ஏற்பட்ட சலசலப்பைத் தவிர வேறு ஒலியில்லை. எங்கேயோ தொலைவில் நரியின் ஊளைச் சத்தம் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. அரசி, தாமரை படுத்திருந்த இடத்திற்குப் போய்க் கவனித்துப் பார்த்தாள். தாமரையும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். தோழிகள் படுத்திருந்த இடத்தைக் கவனித்தாள். அவர்களும் அயர்ந்த உறக்கத்தில் கிடந்தனர். அடிமேல் அடிவைத்து இருங்கோவேளின் தேவி, தான் படுத்திருந்த இடத்தைவிட்டு நகரத் தொடங்கினாள். இருமல் அவளைக் காட்டிக் கொடுக்க முனைந்தது. மிகச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.