உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

245


ரோமாபுரிப் பாண்டியன் 245 கரிகாலனின் விருப்பப்படி பூம்புகார் மாளிகையில் தங்கியிருந்த பாண்டிய நாட்டுத் தளபதி நெடுமாறன் கொலு மண்டபத்தில் நுழைந்து மன்னனுக்கும் புலவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, அமர்ந்தான். கரிகாலன் உருத்திரங்கண்ணனாருக்கு நெடுமாறனை அறிமுகம் செய்து வைத்தான். உடனே புலவர், பாண்டியன் பெருவழுதியின் நலன்கள் பற்றி அக்கறையுடன் நெடுமாறனிடம் விசாரித்தறிந்து மகிழ்ந்தார். அதன் பின்னர் கரிகாலன் அவையிற் குழுமியிருந்தவர்களை நோக்கிப் பின்வருமாறு உரையாற்றினான். “அன்புக் குடிமக்களே ! அவைப் புலவர்களே! நாடு காக்கும் நல்லவர்களே! இன்று நமக்கெல்லாம் ஒரு திருநாள். நமது சோழ மண்டலத்து வரலாற்றில் ஒரு பொன்னேடு சேர்க்கப்படுகிறது இன்று. தமிழ்த் தாயின் செல்வங்கள் நாம். தமிழால் வளர்க்கப்படுகிறவர்கள் நாம். நமது அருமைத் தாயை அன்புடன் பேணி வளத்துடன் வாழ வைக்க வேண்டிய கடமைக்குரிய வர் நாம் என்பதை உணர்ந்திருக்கிறோம். தாய்மொழிப் பற்றில்லாதவன் என்னதான் உலகத்தில் மேன்மையுடனும் புகழுடனும் வாழ்கிறான் என்று கூறினாலும் அந்தப் புகழும் மேன்மையும் குருடன் கையில் இருக்கும் விளக்கைப் போன்றது தான் என்பதை மறந்துவிடக் கூடாது; நாம், நமது மொழியை-நாட்டை -கலையை -நமது மக்களை நேசிக்கிறோம். நமது உரிமை உணர்ச்சிகளை அழிக்க எத்துனை வல்லமை வாய்ந்த எதிரிகளாலும் முடியாது. நல்லதிடசித்தத்தையும் உறுதிப் பாட்டையும் நமக்கு அளித்தவள் நமது தமிழன்னைதான்! எவ்வளவு இடர்ப்பாடுகள், இடுக்கண்கள் வந்துற்றாலும் தமிழ்த்தாயின் குளிர்ந்த முகத்தைக் கண்டு அவள் அரவணைப்பின் சுகம் பெற்று எல்லா வேதனைகளையும் மறந்து விடுகிறோம். இப்போது நான் அமைதியான உள்ளத்தோடு இல்லை! என் நெஞ்சில் அடித்துக் கொண்டிருக்கிற புயலின் வேகத்தை யாராலும் உணர்ந்து கொள்ள இயலாது. ஆனால் என் அமைதியற்ற இதயத்துக்கு அமைதி வழங்கும் தாய், இதோ வந்திருக்கிறாள்! ஆமாம்! உருத்திரங்கண்ணனார் உருவத்திலே என் தமிழ் அன்னை வந்திருக் கிறாள். அவள் என் கவலையைப் போக்குவாளாக! என் துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பாளாக! சோழ மண்ணின் பெருமைகளைப் பற்றி வீறு கொண்ட தமிழில் பாப்புனையக் காத்திருக்கிறார் நமது பைந்தமிழ்க் காவலராம் கடியலூர்ப் புலவர் பெருந்தகை உருத்திரங்கண்ணனார். அந்த நல்லார் இப்போது தமிழன்னைக்கு முத்தாரம் அணிவிப்பார். அதனைக் கண்டு, கேட்டு நாமெல்லாம் புதிய வலிவும் பொலிவும் பெறுவோமாக!" -எனக் கூறி மன்னன் நிறுத்தியதும் கொலுமண்டபம் அதிரும் வகையில் "கரிகால் பெருவளத்தார் வாழ்க!', 'கடியலூரார் வாழ்க!