உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

255


ரோமாபுரிப் பாண்டியன் 255 நகரத்து மக்கட் பேரலையோ பயங்கரமாக எழுந்து விட்டது. வீட்டுத் திண்ணைகளில் கூடி, வீதி மூலைக்கு வந்து, ஒருவர் இருவர் என்று துவங்கி, ஆயிரம் இரண்டாயிரம் எனப் பெருகி, இறுதியில் அரண்மனை முகப்புக்கே வந்துவிட்டது அந்தக் கூட்டம். அதில் நாடி தளர்ந்த ஒரு கிழவன் முன்னுக்கு வந்து நடுங்கிய குரலில் பேச ஆரம்பித்தான். தொண்டை சூடு பிடிக்கும் வரையில் கிழவனைப் போல பேசிக் கொண்டிருந்த அவன் சிறிது நேரத்திற்கெல்லாம் சிங்கம் போல் கர்ஜித்தான். - "வேந்தே! வீட்டுக்கொரு வீரர் வந்துவிட்டோம்! அந்த வீரனின் விலா எலும்பை முறித்து, அதிலே அழகான விசிறியொன்று செய்கிறவரையில் என் உயிர் போகாது! எங்கள் குலத் தலைவனை மங்காத தமிழ்ப் பெருமகனை - வட புலத்தான் தலை நொறுங்க இமயத்தில் ஏறி நின்று எட்டுத் திசையும் முரசு கொட்டியவனை - இனி வாழவிடக் கூடாது என்று அந்த வஞ்சக இருங்கோவேள் திட்டம் தீட்டி விட்டான்!நமது வாட்கள் நீட்டப்பட வேண்டியதுதானே நியாயம்! ஏ, அரண்மனைக் காவலர்களே! எங்கள் மன்னவனைக் கொல்ல எண்ணிக் குறிபார்க்கும் குள்ள நரிக் கூட்டத்தைக் கூண்டோடு அழிப்பதற்குப் பூம்புகார் நகரமே பொங்கியெழுந்து விட்டது என்ற செய்தியை உள்ளே அனுப்புங்கள்! ஏ, கனமான கோட்டைச் சுவர்களே! தொங்கிப்போன நரம்புகள் எல்லாம் முறுக்கேறி விட்டன. இனி இருங்கோவேளின் தலைதான் பனங்குலை போல் தொங்க வேண்டும் என்று பூம்புகார் மக்கள் முடிவு செய்துவிட்ட போர்ச் செய்தியை நம் மன்னர் பெருமானின் காதுகளில் எதிரொலிக்கத் தயங்காதீர்கள்!” இப்படி நகரம் போர்க்கொடியேந்தி வெறிபிடித்து நின்று கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் கரிகால் மன்னன் தன் உள்ளத்தில் தாக்கிய குழப்ப அம்புகளையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு அமைதியாகத் தன் மாளிகைத் தாழ்வாரத்தில் நடை பழகிக் கொண்டிருந்தான். பகைவனின் மனைவி தன்னைக் கொல்ல வந்தாள். அவள் மீது அவனுக்கு ஆத்திரமே ஏற்படவில்லை; ஆழ்ந்த அனுதாபமே ஏற்பட்டது. அவளது சாவு அவனைக் கலக்கிவிட்டது. அதே சமயம் தன்னைக் காப்பாற்றுவதற்குச் சோழ நாட்டிலே பிறந்த ஓர் உழவன் முன்வந்தான் என்பது மன்னனைப் பெரிதும் மகிழச் செய்தது. தன்பால் குடி மக்களுக்கு இருக்கும் அன்பினை நினைத்துப் பூரித்துப் போனான். அந்தக் களிப்பின் அடையாளந்தான் போலும் முகத்தில் வீசும் ஒளி! உலவிக் கொண்டிருந்தவனின் எதிரே வீரன் ஒருவன் வந்து நின்றான், “என்ன?” என்று ஆவலாகக் கேட்டான் மன்னன்.