ரோமாபுரிப் பாண்டியன்
259
ரோமாபுரிப் பாண்டியன் 259 "மனைவியின் திருமுகத்தைக் கடைசித் தடவையாகக் காண்பதற்கு நாம் இருங்கோவேளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே முறை என்று கருதுகிறேன்." நீண்ட சிந்தனைக்குப் பிறகு அரசனின் மனத்தில் எழுந்த இந்த முடிவைத் திடீரென மறுத்துவிட அமைச்சர் பயந்தார். ஆனாலும் அவ ரால் முடிவை ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. கடும் பகைவனாகக் காட்சி தந்தவாறு எந்த நேரத்தில் கரிகாலன் வாழ்வைச் சூறையாடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கும் இருங்கோவேள் மீது அவ்வளவு இரக்கம் காட்டுவதா? "அரசே! இருங்கோவேளைக் கண்டால் சோணாட்டு மக்கள் பொடி செய்து விடுவார்கள். இருங்கோவேளிடம் நாம் காட்டுகிற பெருந் தன்மை அவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்து, கடைசியில் நமது போர் முறைக்கே இழுக்கு ஏற்பட்டு விடக்கூடும். மக்களின் கொந்தளிப்பை அடக்கவே முடியாது, மாமன்னா! பூம்புகாரில் இப்போதே புயல் எழுந்துவிட்டது என்று சொல்லலாம்.' இந்தப் பதிலை அமைச்சர் நடுங்கியவாறு கூறினார். "என்ன அமைச்சரே இப்படிப் பேசுகிறீர்? நமது மக்கள் நம்மையும் மீறியா நடந்து கொள்வார்கள்? இருங்கோவேள் நமது பகைவன் என்பது உண்மை. என்னைக் கொல்லும் முயற்சியில் இரண்டொரு முறை ஈடுபட்டிருக்கிறான் என்பதும் உண்மை. இன்றைக்கு நாம் அவனிடம் காட்டுகிற பெருந்தன்மையால் இந்தப் பகை உணர்ச்சி அழிந்துவிடப் போவதில்லை. அவனும் அப்படிப்பட்ட உத்தமனுமல்ல. அனைத்தும் நானறிவேன். ஆனாலும் இதையெல்லாம் நினைத்து அவன் வீட்டில் நடைபெற்று விட்ட இந்த சோக நிகழ்ச்சியை நாம் நமது விளையாட்டு விழாவாக ஆக்கிவிடக்கூடாது. இறந்து கிடப்பது அவன் மனைவி. அவனை உயிருக்குயிராக நேசித்த மனைவி. அவன் இலட்சியம் நிறைவேற வேண்டும் என்ற கவலையில் தன் உயிரையே பணயமாக வைத்த பாவை. அப்படிப்பட்டவளின் உடலை அவன் கண்ணுக்கே காட்டாமல் புதைத்து விடுவது என்பது சொல்ல முடியாத கொடுமை. சிறிது யோசித்துப் பார்ப்போம். இது போன்ற ஒரு நிலை நமக்கே ஏற்பட்டிருந்தால் நம் மனம் என்ன பாடுபடும்? ஏதோ அவசரத்தில் முடிவு செய்து பெருந்தேவியை அனுப்பி விட்டான். வந்த காரியத்தில் அவளுக்கு வெற்றி ஏற்பட்டாலும்தோல்வி ஏற்பட்டாலும் முடிவு இப்படித்தான் ஆகும் என்பதை அவன் உணராமல் இருந்திருக்க வேண்டும்; அல்லது அவனுக்கே தெரியாமல் கூட அவள் வந்திருக்கக் கூடும். எப்படியிருப்பினும் இருங்கோவேள் வந்து அவள் முகத்தைக் கடைசியாகப் பார்த்துச் செல்வதற்கு நாம் தடையாக இருக்கக் கூடாது.