28
கலைஞர் மு. கருணாநிதி
கி.மு.20-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் சோழப் பெருமன்னன் கரிகாலன் திருநகரம் பூம்புகார்ப் பட்டினம் புதிய பொலிவு பெற்றுத் திகழ்ந்தது. மருவூர்ப் பாக்கத்தில் கடற்கரையையொட்டி அமைந்திருந்த வான்முட்டும் மாட மாளிகைகளில் எல்லாம் சோழனது கொடியும் பாண்டியனது கொடியும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டு பறந்தன. யவனப் பெருமக்களின் மாளிகைகளில் எழில் நிறைந்த தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. "வாழ்க சோழ பாண்டியர் உறவு!” என்ற எழுத்துக்களை முத்துக்களால் பதித்த கம்பீரமான நுழைவு வாயில்கள் பட்டினப்பாக்கமெங்கும் காட்சி தந்து கொண்டிருந்தன. மருவூர்ப் பாக்கத்தில் வாழும் வணிகர், பட்டாடை, பருத்தியாடை, கம்பள ஆடை நெய்வோர். பொற்கொல்லர், பூக்கட்டுவோர், ஓவியர், சிற்பிகள், மாலுமிகள் அனைவரும் புத்தாடை புனைந்து அரச வீதி நோக்கி விரைந்தனர். நிலக்கிழார், மருத்துவர், மறையவர், அரண்மனை அலுவலர், பாணர், இசைவாணர், புலவர் பெருமக்கள் அனைவரும் தாம் வாழ்கின்ற பட்டினப்பாக்கத்தையே விழாக்கோலம் பூணச்செய்து, தங்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அரச வீதியை இமைகொட்டாது ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். உலகமே வறுமைக் காடாக மாறிவிட்டாலும் பூம்புகார் வறுமைக் கோலம் கொள்ளாது என்று முழங்கிக் கொண்டிருந்த புகார்த் துறைமுகப்பட்டினத்தின் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் புலியுடன் மீன் கொடியும் சேர்ந்து பறந்த பெருமைக்குரிய காட்சியை அனைவரும் கண்டு பூரிப்புக் கொண்டனர். கரிகால் பெருவளத்தானுக்கு மகத நாட்டு மன்னன் வழங்கிய பட்டி மண்டபம் ஒளிமயமாக விளங்கிற்று. வச்சிர நாட்டான் அளித்த கொற்றப் பந்தர், அழகின் சிகரமாக அமைந்திருந்தது. அவந்தி நாட்டு மன்னன் தந்த 'தோரண வாயில்' 'மதுரைக் கொற்றவனே வருக! வாழ்க!' என்று முழங்கிக் கொண்டிருந்தது.
எழில்சேர் மங்கையர் யானைகளின் மீதமர்ந்து முன் செல்ல, பூம்புகார்ப்பட்டினம் அதுவரை காணாத மாபெரும் பனியொன்று அந்த மாநகரில் நடைபெற்றது. தானைத் தலைவர்களும் நாற்படை வீரர்களும் அணிவகுத்து வர இரு யானைகளின்மீது மாமன்னர்