314
கலைஞர் மு. கருணாநிதி
314 கலைஞர் மு.கருணாநிதி அனுபவிக்கக்கூடாத எத்தனையோ தொல்லைகளை அனுபவித்து விட்டாள்! தன்னைப் போல் ஒரு பெண்ணாகிய தாமரையே காதலிக்கும் விசித்திரத்தை நடத்தினாள். திருநீற்றுக்குள்ளே துரோகத்தை மறைத்துக் கொண்டிருந்த சிவனடியார் கூட்டத்திலிருந்து தன் கற்பை காப்பாற்றிக் கொண்டாள்! பெற்றெடுத்த பேசும் தெய்வமாம் தன் தந்தையைத் 'துரோகி' என்று வசை பாடினாள்! இவை மட்டுமல்ல; வேடத்திற்காக அவள் உடலிலே ஒட்டிக் கொண்டிருந்த கட்டாரியால் கொலை ஒன்றையுங் கூடச் செய்திருக் கிறாள். செழியனிடமிருந்து இருங்கோவேள் துன்புறுத்தி எழுதி வாங்கிய வஞ்சக ஓலையைக் கொண்டு, படையெடுத்து வருகின்ற பாண்டியர் தளபதியை ஏமாற்றச் சென்ற கொடுங்கோல் என்பவனின் மார்பிலே கட்டாரியைப் பாய்ச்சித் தானே அந்தக் கடிதத்தை அபகரிக்க வேண்டி யிருந்தது! இவ்வளவு வேதனைகளுக்கும் இடையே அவள் சிறிது சிரிக்கவும் முடிந்தது; இருட்குகைக்குள்ளே பயணம் நடத்தச் சென்றவளுக்குக் கிடைத்த ஒளிவிளக்குப்போல், அவள் வீரபாண்டியைக் கருதினாள்! ஆனால் அந்தோ பரிதாபம்! இளமை உணர்ச்சி விலைக்கு வாங்கிய அந்த உறவும் அவளை அறியாமலே அவளுக்குச் சதி செய்து விட்டது. தன் குறிக்கோளுக்குப் பக்கபலமாவான் வீரபாண்டி என்று கருதி, தானே இருங்கோவேளுக்குத் துணையாக இருந்திருக்கிறாள் என்பதை அவள் அறிய முடியுமா? இப்படிக் குறுகிய காலத்திலேயே வாலிபப் பருவத்துக்குள்ளேயே - வாழ்க்கையின் கோரமான பகுதிகளைச் சந்தித்துவிட்ட அவள், இப்போது, அதன் இறுதிக் கட்டத்திற்கே சென்றுவிட்டாள்! வீர பாண்டியை மரண முகட்டுக்கு அனுப்பி விட்டதாகச் சொல்லி, 'இனி நீ எனக்கு விருந்தாகி விடு' என்று அவளை முத்தமிடத் துடித்தானே இருங்கோவேள்...? அவன் இனிமேல் அவளை விட்டு விடவா போகிறான்? தாமரை மட்டும் தடுத்திருக்காவிட்டால் அவள் நிலை எப்போதோ அவலத்தை அடைந்திருக்குமே! வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மிகச் சிக்கலான பகுதிக்கு வந்துவிட்ட ஒரு பெண் என்ன நினைப்பாளோ... அதைத்தான் முத்துநகையும் செய்தாள்! கொள்கைகள் மாண்டு மடியலாம்; ஆனால் கற்பைச் சாகவிட எந்தப் பெண்தான் சம்மதிப்பாள் - அதுவும் தன் காதலனையே வீழ்த்தி விட்டதாகச் சொல்லும் ஒரு கயவனிடம்! இருங்கோவேளிடமிருந்து