ரோமாபுரிப் பாண்டியன்
333
ரோமாபுரிப் பாண்டியன் - 333 கோச்செங்கணானின் இந்தக் கட்டளை, காட்டுக் கெரித்த நிலவாகி விடவில்லை; படையிருந்தும், படைக்கலன் இருந்தும், எதிரியின் தலைகளைப் பந்தாடவேண்டும் என்ற பகை இருந்தும், வேளிர் வீரர்கள் தீப்பட்ட புழுவைப்போல் விழுந்து துடித்த காட்சி, ஆணையிட்ட தலைவன் கண்டாலும் அதிர்ந்துவிடக் கூடியதாகத்தான் இருந்தது! - ஆனால் அந்தப் போர்க் காட்சியைக் கண்டும் களிக்க முடியாமல் 'வெற்றிக்கு வழிகாட்டுங்கள்!' என வீர உரை கொடுக்க ஆவல் இருந்தாலும் வாய் திறக்க முடியாமல் மலைப்பாம்பின் மடியிலே தன் மரணத்தையல்லவா எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருக்கிறாள் முத்துநகை! மென்மையற்ற காட்டு மிராண்டிகளின் உடலையே புசித்துப் புசித்துச் சலித்துப்போன அந்தப் பசியெடுத்த மலைப் பாம்புக்கு, ஒரு மனித உடலைச் சுவைபார்ப்பதில், அதுவும் ஒரு கொள்கைவாதியின் வீரம் துடிக்கும் மேனியை விழுங்குவதில் என்ன ஆர்வமோ தெரியவில்லை. அந்தச் சுவையான விருந்துக்கு தன்னைத் தயார்செய்து கொண்டது வேக வேகமாக! அதன் பிடி இறுகியது. முறுக்கிய கயிற்றைப் போல் அதன் நீண்ட உடலுக்கு இடையிலே சிக்கித் தவித்தாள் முத்துநகை! இந்த மரணப் போராட்டத்தைப் பார்க்காத பூம்புகார் மக்கள், மனித உருக்கொண்டு வந்திருந்த மலைப்பாம்புகளை அழிக்கும் பெரும் பணியிலே தங்கள் உயிரையே பணயம் வைத்து ஈடுபட்டிருந்தார்கள்! ஓட்டைக் கூரை வழியே ஊடுருவும் ஒளிபோல் பூம்புகார் வீரனின் மார்பிலே பாய்கிறது ஒரு வேல்! கரிகாலர் வாழ்க!" என்று கூச்சலிட்டுச் சாகிறான் அவன்! அந்தக் குரல்கேட்டு ஓடிவரும் வேறொருவன் முகத்திலே புன்னகை! செத்து மடிந்தவனைக் கண்டு சிரித்திடக் காரணம்.; அவன் நெஞ்சிலே பாய்ந்திருக்கிற வேல் தனக்குக் கருவியாகப் பயன்படுமே என்ற மகிழ்ச்சி! ஆமாம்! உடன்பிறந்தான் ஒருவனைக் கொன்ற அந்த வேல், வேளிர்குடி வீரர்களை பலரை வீழ்த்தும் வாய்ப்பைத்தான் தேடித் தருகிறது! சாவும் சாதனைக்கு வழிகாட்டிய இத்தகைய நிகழ்ச்சிகள் அந்தப் போரிலே ஏராளமாக நடைபெற்றன! அப்படிச் செத்தும் கொடுத்தவர்களின் சவங்களின் மேல் நின்றவாறு பூம்புகார்ப் பெரும்படை போராடிக் கொண்டிருந்தது! அதுமட்டுமா! கையிலே கருவி கிடைக்காத வீரர்கள் தங்கள் கரங்களையே கருவிகளாக்கிக் கொண்டனர். இன்னும் சிலர் இயற்கை அன்னையின் தயவையும் நாடத் தயங்கவில்லை. உருண்டு கிடந்த குண்டுக்கற்களைப் பலங்கொண்ட மட்டும் தூக்கிப் பகைவர்களின் தலைகளைக் குறி வைத்து வீசினார்கள்! தலை சிதறிய உடல்கள் பல இப்படி கீழே சாய்ந்தன!