ரோமாபுரிப் பாண்டியன்
335
ரோமாபுரிப் பாண்டியன் 335 மறுகணம் மறைந்திருந்த அவர்களும் சண்டை நடக்கின்ற இடம் நோக்கிச் சண்டமாருதமெனக் கிளம்பினார்கள்! குழந்தைகள் எழுப்பிய கூக்குரல் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை; ஏறுநடை போட்டு வேகவேகமாக நடந்தார்கள். உங்களுக்குச் சளைத்தவன் நானல்ல என்று சவால் விடுகிற முறையிலே வேளிர்குல அமைச்சர் செந்தலையார் அவர்களை நோக்கினார்; அந்தக் கிழப்புலி மீண்டும் உறுமியது! "தொகைதொகையாகப் புறப்பட்டுவிட்டனர் பகைவர்கள்! இருங்கோவேளின் விலாப்புறத்து எலும்புகளே! நம் குல மன்னனைப் பிடித்துவிட்ட மதோன்மத்தனாம் கரிகாலன், படைக்குப்பதிலாகப் பல்லாடும் கிழவர்களையும் அனுப்பி விட்டான். வாருங்கள்! நல்ல பாடம் புகட்டுவோம். அந்த பகல்வேடக்காரனுக்கு! துவண்டு விடாதீர் கள்; துண்டாடுங்கள் துரோகிகளை; நாளை நம் மன்னர் மீண்டு வந்தால் எதிரிகளின் இரத்தத்தால் குளிப்பாட்டுவோம் அவரை! வெற்றி விழாக் கொண்டாடுவோம்; இந்த வீணர்களின் மரணக் கூக்குரலைப் பின்னணி யாக்கு. பகை! பகை! பகை!" இப்படி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு முழங்கிய செந்தலையார், மறுகணமே "அய்யோ!” என்று அலறினார். அந்தக் கதறல் காட்டையே ஓர் உலுக்கு உலுக்கி விட்டது! வேளிர்குல வீரர்கள் திடுக்கிட்டு குரல் வந்த திசையை நோக்கி னார்கள். அங்கே... நெஞ்சிலே பாய்ந்த வேல் குத்திட்டு நிற்க - குருதி வெள்ளத்திலே தெப்பமென மிதந்து கொண்டிருந்தார் செந்தலையார்! “அய்யோ.. அமைச்சரே!" வேளிர்குடி வீரர்களின் இந்த கூக்குரல் ஒன்றாகச் சேர்ந்து எழுந்தது. சிலர் அவரிடம் ஓடினார்கள். பலர் செயலற்று நின்றார்கள்! கடைசிக் காலத்தில் அவர்களின் பக்கத்தில் நின்று, போராடும் துணிவூட்டிக் கொண்டிருந்த ஒரே ஒரு மூச்சும் காற்றோடு கலந்துவிடப் போகிறதே- என்பதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. "என்னை விட்டுவிடுங்கள்! என்னை விட்டுவிடுங்கள்!!" செந்தலையார் தன்னை நோக்கி வந்தவர்களைப் பார்த்து, 'வராதீர்கள்' என்கிற பாணியில் சைகை காட்டினார். நான் சாகவில்லை! நோய்க் கிருமிகள் என்னை அரித்துத் தின்று, ஈளைகட்டி, இருமி, விக்கி, வியர்த்து, விழி பிதுங்கி - நான் சாகவில்லை!