உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

கலைஞர் மு. கருணாநிதி


மலைப்பாம்பின் விரிந்த வாய்க்குள்ளே தன் உடல், உயிர், அவற்றினும் மேலான இலட்சியம் - எல்லாவற்றையுமே அர்ப்பணிக்க இருந்த நேரத்தில் கூட முத்துநகையின் உள்ளத்திலே அந்தப் போராட்டம் நிகழவில்லை. காட்டுக்கு மத்தியிலே கரிகாலனுக்கு முன்னே - கோச்செங்கணானின் உடையிலே நிற்க வேண்டிய எதிர்பாராத நிலை ஏற்பட்டபோது தணலிடைப்பட்ட புழுவாகத் துடித்தது அவளது நெஞ்சு! - வீரத்தோடு மலைப்பாம்பை வீழ்த்திவிட்டுப் பாசத்தோடு தன்னைத் தூக்கி நிறுத்திய மன்னனது கரங்களிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்டாள். ஆனால் நெஞ்சில் நிறைந்துவிட்ட புகை மண்டலத்திலிருந்து பனி நிறைந்த மூட்டத்திலிருந்து அவளை விடுவிக் கும் சக்தி அப்போது எதற்குமே கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ பூம்புகார்ச் சரித்திரத்தில் நடைபெற்றிராத செயல் ஒன்றைச் செய்துவிட்டாள் அவள். அதைப்பற்றி மன்னன் என்ன கருதுகிறான்? மக்கள் வாழ, தான் வாழ நினைக்கும் அந்தப் பெருந்தகையாளனின் பூமியிலிருந்து 'புறப்படுவீர் மக்களே!' என்று ஆணையிட்டு அழைத்துச் சென்ற அதே நேரத்தில் அவனுடைய நெஞ்சிலே குடி கொண்டிருந்த அமைதியையும் அல்லவா கூடவே அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள்? மன்னனுக்கு எதிராக மக்களைத் திரட்டிய குற்றமும், ஆணையேதும் பெறாமல் அவர்களை எதிரியின் பாசறை நோக்கித் திருப்பிவிட்ட குற்றமும், நடுக்காட்டிலே இரத்தக் களரியைத் தோற்றுவித்த பலரை இறப்புலகிற்கு அனுப்பிவிட்ட பயங்கரமான குற்றமும் மன்னிக்கக் கூடியவையல்ல என்பதை முத்துநகை நன்கு உணர்ந்து விட்டாள். அதனினும் பெருங்குற்றம் மன்னனை அந்த மாறுவேடத்தில் ஏமாற்றிக் கொண்டு நிற்பதல்லவா? இந்த இக்கட்டான நிலையிலிருந்து தப்புவதற்கு வேறு என்ன தான் வழி? மின்வெட்டு நேரத்தில் முத்துநகையின் உள்ளத்தில் இந்த எண்ணங்களின் சதிராட்டம் நடைபெற்றுவிட்டது! இந்த ஊமை நாடகத்திற்கு எப்படி முடிவு காண்பது என்று தவித்துக் கொண்டிருந்த போது, அந்தத் திருப்பணியை ஏற்றுக் கொள்வதைப் போல் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.