350
கலைஞர் மு. கருணாநிதி
350 கலைஞர் மு. கருணாநிதி தோளிலே தலை புதைத்துக்கிடக்கும் தோகை மயிலின் முதுகைத் தடவிக் கொடுத்தவாறே மரமாளிகையிலிருந்து கிளம்பும் தீச்சுழலை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் வீரபாண்டி. அந்தநேரம் அவன் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்? பாசறை படுசூரணமாகி விட்டது. படை வீரர்கள் பலர் மாண்டனர். மிஞ்சிய சிலரும் உயிர் காக்க ஓடிவிட்டனர். அவனுக்கென உலகத்திலிருந்த ஒரே ஓர் இடத்தையும் நெருப்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது! அதை அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தப் படுபாதகத்தைச் செய்தவள் அவன் மீது வாடிய கொடியெனப் படர்ந்து கிடக்கிறாள். அதையும் அவன் உணர்ந்து பார்க்காமலில்லை. மரமாளிகையில் எழும் தீயை ஒரு முறை பார்க்கிறான். அதற்குக் காரணமான தன் காதலியை ஒருமுறை பார்க்கிறான். கண்களில் கனலும், புனலும் ஒருசேரக் கிளம்பு கின்றன. கனல் கரிகாலனை நினைத்தா? புனல் அந்தப் பூங்கொடியை நினைத்தா? ஒன்றுமே புரியவில்லை! பூகம்பமாகி விட்டது நெஞ்சம்!