352
கலைஞர் மு. கருணாநிதி
இருங்கோவேளின் மாளிகையைத் தகனம் செய்து விட்டு மனமகிழ்வு கொண்ட பூம்புகார் மக்கள் தலைநகருக்குத் திரும்பத் தலைப்பட்டனர். மக்கள் பெருங்கூட்டம் அந்த மண்டபத்தைத் தாண்டிச் செல்லும்போது அவன் முத்துநகையை அணைத்தவாறு தூண்களிலும் புதர்களிலும் தன்னை மறைத்துக் கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டான். கொஞ்சம் கொஞ்சமாகத் தலைநகரத்து மாந்தரும் மண்டபத்தைக் கடந்து சென்றுவிட்டனர். அருங்கோவேள் மாளிகைக்குத் தீயிட்ட மகிழ்ச்சியில் ஒரு வாலிப வீரன் ஆடிப்பாடிக் குதித்துக் கொண்டு வந்ததை வேளிர்குல மன்னனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்குப் பின்னால் யாரும் வரவில்லை என்பதையும் அவன் புரிந்து கொண்டான். கீழே கிடந்த ஒரு கூரிய கருங்கல்லைக் கையிலே எடுத்தான். பலங்கொண்ட மட்டும் அந்தக் கல்லை அந்த வாலிபனின் தலைக்கு நேரே குறி பார்த்து வீசினான். கொதிப்பேறியிருந்த இருங்கோவேளின் குறி தப்பவில்லை. ஆடிப்பாடி வந்த அந்த வீரன் 'அய்யோ!' என்று ஓலமிடக் கூட முடியாமல் அப்படியே தரையில் சுருண்டு விழுந்து கடைசி மூச்சைக் காற்றோடு கலக்கவிட்டான். அவனைக் கொன்றதிலே இருங்கோவேளுக்கு ஒரு திருப்தி. அந்தத் திருப்தியோடு மரமாளிகைப் பக்கம் திரும்பினான். மாளிகை எரிந்து முடிந்துப் புகை பரப்பிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, முத்துநகையை வெறிக்கப் பார்த்தான். அவளை அவன் பார்த்த பார்வையில் பழியுணர்ச்சி தேங்கியிருந்தது. அவளை மெதுவாகத் தன் முன்னங்கையில் சாய்த்துக் கொண்டான். இன்னமும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை. அவனது வலிமை மிகுந்த வலக்கரம் அவளது கழுத்தை நோக்கிச் சென்றது. ஒரு கையால் உடலை அணைத்து, இன்னொரு கையால் அவள் உயிரையும் அணைத்து விடுவானோ என்ற பயங்கர நிலை உருவாகி விட்டது! - அவன் கண்கள் சிவப்பேறிவிட்டன - பற்களைக் கடிக்கிறான்- வலக்கரமோ புலியின் முன்னங்கால்போல உயர்ந்து எழுந்து கழுத்துக்கருகினில் வந்துவிட்டது! அந்தக் கைவிரல்கள் ஒவ்வொன்றும்