உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

371


ரோமாபுரிப் பாண்டியன் 371 தாங்கள் அதை விடுத்துத் தாயகத்தை எதிரிக்குக் காட்டிக் கொடுக்கும் இழிசெயலை மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை. - மன்னன் அன்று பேசிய வாசகங்களை நினைத்துக் கதறினார் காரிக்கண்ணனார். அவருக்கு அந்த வசதிகள் நிறைந்த சிறை மாளிகையில் அமைதி ஏது? பெருங்காற்றில் கரை மோதும் அலைகள் போல் நினைவுகள் உயர்ந்தும் தாழ்ந்தும் அவரைக் குடைந்தெடுத்த போதும் எழுதும் பணியிலிருந்து விடுபடாமலிருந்த அவர், திடீரெனத் தன் முன்னே வந்து நிற்கும் வேளிர்படை வீரனைக் கண்டதும் வியப்புற்றார். விழிகளை அகல விரித்து எதிரேயிருந்த விளக்கைக் கையிலேந்தி மெல்ல நடந்து அவன் முன்னே வந்தார். செழியன் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தான். அவனுடைய உள்ளத்தில் அதிசயம் மட்டுமல்ல; திகிலும் குடி கொண்டிருந்தது.. தன்னைச் சுற்றியவாறு ஒருவன் பின் தொடர்கிறான் என்றும், அவனுடைய ஏற்பாட்டின்படியே தனக்கும் புலவருக்கும் கூடச் சந்திப்பு ஏற்பட்டிருக்கக் கூடுமென்றும் ஊகித்தறிந்து கொண்ட செழியன், புலவரிடம் தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாமல், அவர் அருகே வரும் வரையில் அப்படியே நின்று கொண்டிருந்தான். விளக்கைத் தூக்கிச் செழியனின் முகத்திற்கு நேராகப் பிடித்தவாறு புலவர் மெல்லிய குரலில், "யார்?" என்று கேட்டார். "நான் வேளிர்படை வீரன். இருங்கோவேளின் தங்கை தாமரையுடன் வந்திருக்கிறேன்" என்றான் செழியன். வேளிர்படை! -இருங்கோவேள்!! இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் புலவருக்குப் புதியதோர் ஆவேசமே பிறந்தது. உரக்கக் கத்தினார்: "இருங்கோவேள்! ஆகா, இருங்கோவேள் என்னுடைய மன்னன்! அவருடைய ஆணையின்படி நான் கரிகாலனைக் கொன்று குவிக்கத் துணை நிற்க வேண்டும். அந்த ஏற்பாட்டிற்காகத்தான் இளவரசி தாமரையும் நீயும் வந்திருக்கிறீர்களா? வேளிர் வீரனே! நான் யார் தெரிகிறதா? நான் சோழ மண்டலத்தைக் காட்டிக் கொடுப்பவன், பூம்புகாரில் இருங்கோவேளின் அடிமை, கரிகாலனைக் கொல்ல வந்த காலன்." இந்த உணர்ச்சி மிக்க வார்த்தைகளைக் கேட்டதும் செழியனின் உடல் நடுங்கிற்று. மயிர்க் கூச்செரியும் வார்த்தைகளால் அவன் செவிகள் செவிடுபட்டன. இடி முழக்கம் கேட்டவனைப் போல் காதுகளைப் பொத்திக் கொண்டு நின்றான்.