376
கலைஞர் மு. கருணாநிதி
அனைவரும் போன பிறகு காரிக்கண்ணனார் ஒரு பெருமூச்சு விட்டுத் தனக்குத்தானே. “அப்பாடா!! என் ஆசை நிறைவேறியது; எனக்குத் தெரியாது என்று கருதிக் கொண்டு இந்தநாட்டில் பலர் என் கண்ணைக் கட்டிவிட்டுக் காரியமாற்றுவதாகப் பெருமைப்படுகின்றனர். நான் எழுதிய ஓலைச் சுவடி சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விடும்; இனிமேல் நாம் நிம்மதியாக உயிர் விடலாம்" என்று தழுதழுத்த குரலில் கூறிக்கொண்டார். அவர் கூறிய வார்த்தைகளை அந்த அழகான அறையின் சுவர்கள் கூட எதிரொலிக்காமல் அவரை மௌனமாகச் சூழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தன. வேளிர்குல வீரன் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே தன்னைச் சுற்றி மெய்க்காவலர் படையினர் ஒளிந்திருப்பதைப் புலவர் கவனித்துவிட்டார்; அந்த வீரனிடம் ஒப்படைக்கும் ஓலைச் சுவடியை மெய்க்காவலர் கைப்பற்றிக் கொள்வர் என்று அவரால் ஊகித்துக் கொள்ள முடிந்தது. அப்படியிருந்தும் அவர் சுவடியைத் துணிவுடன் வேளிர் வீரனிடம் கொடுத்தார். கொடுத்தது மட்டுமல்ல; அது போய்ச் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிடும் என்றும் எண்ணிப் பெருமூச்சு விட்டார். சேர வேண்டிய இடம் எது? புலவர் கருதும் அந்த இடம் இருங்கோவேளின் முன்னிலைதானா? அல்லது கரிகாலனின் கரங்களில் சேர வேண்டுமென்று விரும்புகிறாரா? ஒரு வேளை அந்த விருப்பம் நிறைவேறும் நம்பிக்கையில்தான் மறைந்தவாறு வேளிர் வீரனைத் தொடரும் மெய்க்காவலனைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறாரா? அவரது விழிகளைவிட்டு வேளிர்வீரனும், மெய்க் காவலரும் மறைந்த பிறகு முன்போலவே விளக்கடியில் உட்கார்ந்து கொண்டு சிந்தனையில் ஈடுபட்டார். பட்டினப் பாலை அரங்கேற்றத்திற்குக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் வந்திருக்கும் செய்தியைக் கேள்விப் பட்டதிலிருந்தே அவரைக் காண வேண்டுமென்ற துடிப்பு மிகுந்தது. கட்டுக்காவலில் கிடக்கும் அவருக்குக் கடியலூராரைக் காண்பதற்கான நல்வாய்ப்பை யார் வழங்கப் போகிறார்கள்? அவரைச் சந்திக்க