ரோமாபுரிப் பாண்டியன்
37
கரிய உயரிய காரியங்கள் என்று அறிஞர் குழாம் இன்றும் சிறப்பித்துக் கூறுவதை என் செவிகள் கேட்டுச் சிந்தையில் குளிரேற்று கின்றன. மதுரைக் காவலனே! எம் சோழ மன்னரின் திறமைக்கும், அரசியல் அறிவுக்கும் ஒரு சிறு உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்!
"சோழரது இளமைப் பருவத்தில் கொலு மண்டபத்திலே முறையிட வேண்டி, வயதேறிய இரண்டு கிழவர்கள் வந்தார்கள். வந்த முதியவர்கள் அரசரது இளமைத் தோற்றங்கண்டு இந்த இளைஞரா முறையீட்டைக் கேட்டு நீதி வழங்கக் கூடியவர் என்று திகைப்படைந்தார்கள். கரிகாலரது வயது கண்டு அந்தப் பெரியவர்கள் அவ்வளவு அலட்சியமாகக் கருதிவிட்டனர். சிறுவனிடம் நீதி கிடைக்காது என்று திரும்பிட எண்ணினர். அதை எப்படியோ மன்னர் புரிந்துகொண்டார். முறையிட வந்த முதியவர்களிடம் தக்க நீதியளிக்கத் தகுதி மிக்க ஒருவரை அழைத்து வருவதாகக் கூறிப் போய்விட்டார் மன்னர். பின்னர் கொலு மண்டபம் கூடிற்று. முறையிட வந்த முதியோர் வந்தனர். தள்ளாடித் தண்டூன்றிய கிழவர் ஒருவர் அரியாசனத்தில் அமர்ந்து நீதி விசாரணையைத் துவக்கினார். வழக்கு முடிந்தது. நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த நேர்மையான தீர்ப்புக்கண்டு முறையிடவந்தவர்கள் மனங்களித்தனர். கிழவரை வாழ்த்தினர். கிழவரின் தாடி கீழே விழுந்தது. நரைத்த தலைமுடி கழன்றது. கிழவர் வேடத்தில் வந்து நீதி வழங்கியவர் இளைஞர் கரிகாலரே என்ற உண்மை வெளியாயிற்று. நாடு மகிழ்ந்தது; கரிகாலரை வாழ்த்தியது. அப்படிப்பட்ட திறமை கொண்டவர் எங்கள் மன்னர்" என்று புலவர் புகழ்ந்துரைத்தார்.
கரிகாலன், புகழுரைகளைக் கேட்க மனமின்றித் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டான். பாண்டியனும் புலவரோடு சேர்ந்து கொண்டு புகழ்மாலை சூட்ட ஆரம்பித்தான்.
"இளம் வயதில் எதிரிகளால் சூழப்பட்டுச் சிறையில் சிக்கிவிட்ட சிங்கமாம் கரிகாலரின் உயிரைக் குடிக்கத் திட்டமிட்ட கொடியவர்களையும் நான் அறிவேன். எதிரிகள் சிறைக் கோட்டத்திற்குத் தீ மூட்டினர். அந்த எரி நெருப்பிலேயிருந்து இவர் தப்பியிருக்காவிட்டால் தமிழகம் மாவீரர் ஒருவரை இழந்திருக்கும்; நான் போற்றுதற்குரிய ஒரு நண்பரைப் பெறாமலே போயிருப்பேன்; பூம்புகாரின் பொலிவு என்றைக்கோ அழிந்து போயிருக்கும்."
பாண்டியனும் புலவரும் மாறிமாறித் தன்னைப்பற்றிப் பேசுவது கண்ட கரிகாலன், "போதும்! தயவுசெய்து நிறுத்துங்கள்! ஏற்கனவே இந்த மணிமுடியால் என் தலை கனத்திருக்கிறது; மேலும் கனத்துப் போகச் செய்யாதீர்கள்!" என்றான் கனிவாக.