ரோமாபுரிப் பாண்டியன்
491
ரோமாபுரிப் பாண்டியன் 491 முத்துநகைக்கோ இனம் விளங்கிடாத உவகைப்பெருக்கு. 'இந்த அண்ணனுக்கு இத்தனை பேர் நடுவே தட்டுத் தடங்கலின்றி நன்றாகப் பேசிட முடியுமா?' என்கிற ஐயப்பாடும் அவளுக்கு எழாமல் இல்லை. எனினும் வியப்பினால் உந்தப்பட்டவளாகச் செழியன் மொழிவதைக் கேட்டிடத் தன் செவிகளைத் தீட்டிக் கொண்டாள். அவள் நினைத்திட்டதைப் போல் சாட்சியம் மொழிந்திடுவதில் எந்தவிதத் தடுமாற்றத்தினையும் அடைந்திடவில்லை செழியன். தட்டுத் தடங்கலின்றிச் சொற்கள் யாவும் அருவித் திரைபோல் மிகவும் இயல்பாக விறுவிறுப்பாக -வந்து விழுந்தன. அவனது கனமான கம்பீரக்குரல் வீணையே வந்து பேசுவதுபோல் இருந்தது. ஆம்; அவனது குரலிலே இழைந்த ஓர் இனிமையான இசை மணம், அந்த அவையம் முழுவதிலுமே கமழ்ந்து வழிந்தது! ... மேன்மை தங்கிய அவையப் பெரியோர்களே! ஒரு சமயத்தினர் தான் தவறுகளைப் புரிந்திட்டார்கள், இன்னொரு சமயத்தினர் எதுவுமே செய்திடவில்லை என்று என்னால் கூறிட இயலவில்லை. சுருங்கச் சொன்னால், இரு சாராருமே தாங்கள் சமயவாதிகள் என்பதனை மறந்து விட்டார்கள். பொறுப்பு உள்ள ஒரு சமயவாதிக்குரிய தரமோ - தன்னல மறுப்போ -முதிர்ச்சியோ - சகிப்புணர்ச்சியோ-அவர்களிடம் இல்லவே இல்லை. செந்நெற்பயிரின் செழுமையைக் கெடுத்திடும் கோரைப் புல் மாதிரி பகுத்தறிவினைப் பாழ்படுத்த வந்தவைதானே மூட நம்பிக்கைகளும், சாதிப் பாகுபாடுகளும்! அவற்றை விடாப்பிடியாக வேரூன்றித் தழைக்க வைத்திடும் ஒரு பொது எதிரியின் கரம் ஓங்கிடாமல் விழிப்போடு வேலை செய்திட வேண்டிய இந்த இரு சமயத்தினரும் தாங்களே ஒருவருக்கொருவர் பொருத முற்பட்டுவிட்டது வேதனைக்குரியதே யாகும். சமணம், பௌத்தம் இவற்றிடமுள்ள பற்றினாலோ அல்லது வேறோர் சமயத்திடமுள்ள வெறுப்பினாலோ நான் இவ்வாறு விளம்பிடவில்லை. எல்லாச் சமயங்களும் எனக்கு ஒன்றுதான்! எந்த சமயத்திலே உயர்ந்த நெறிகள் இருப்பினும் அவை நம் போற்றுதலுக் குரியவையே - இதனால் எனக்கென்று தனிக்கொள்கை ஏதும் இல்லாமலும் இல்லை. 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்!' என்பதே என் கொள்கை! உருவ வழிபாட்டிலிருந்து ஒளி வழிபாட்டுக்கு உதயசூரியன் வழிபாட்டுக்கு - உயர்ந்திட்ட பண்டைக்காலத் திராவிட சமயத்தின் ஒப்பற்ற கொள்கையே என் கொள்கை! புறத்தினில் உள்ள கோவில்களுக்குச் செல்வதைவிட அகத்தையே - உள்ளத்தையே - பெருங்கோவிலாகக் கண்டு வழிபட்ட திருமூலரின் திருவாக்காக மலர்ந்திட்ட கொள்கையும் அதுவே! 'திராவிட சமயமா?' என்று சிலர் விழிகளை அகல விரித்திடக்கூடும், சமண - பௌத்த சமயங்களில் உள்ள -