உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கலைஞர் மு. கருணாநிதி


ஆபத்து வந்திருக்காதல்லவா? தவறு என்மீதுதான்!" என்று தன்னைத் தானே நொந்து கொண்டார் புலவர்.

"உங்கள்மீது தவறொன்றுமில்லையப்பா; தவறு செழியனுடையது தான்! மன்னர்களிடம் தகவல் கொடுக்கவேண்டாமென்று முதலில் தடுத்தது அவர்தானே!" எனத் தந்தைக்குச் சமாதானங் கூறினாள் முத்துநகை.

"செழியனைத் தூக்கிச் சென்றவர்கள் யாராக இருக்கும்? வேளிர்குடி மன்னவன் இருங்கோவேளின் ஆட்களாகத்தான் இருக்கவேண்டும். தோல்வியுற்ற அவமானத்தில் எப்படியும் சோழப் பெருநாட்டில் அமளியை உருவாக்க வேண்டுமென்று எண்ணுகிறான் போலும்!" என்றெல்லாம் புலவர் முனகிக்கொண்டிருந்தார்.

"இருங்கோவேள், மன்னர் கரிகாலரிடம் தோற்று நாடிழந்து நகரிழந்து எங்கேயோ தலைமறைவாக வாழ்கிறான் என்று கூறினார்களே யப்பா; இப்போது அவனிடம் இத்தனை ஆட்கள் ஏது?" என்று சந்தேகத்துடன் வினவினாள் முத்துநகை.

"நாடற்றவர்களைக் காடு காப்பாற்றுகிறது. அந்தக் காட்டின் புதர்களில் புலியும் பதுங்கியிருக்கும்-இந்த வேளிர் குடும்பத்து எலியும் ஒளிந்திருக்கும். குகைகளில் சிங்கமும் படுத்திருக்கும் - அங்கே பகை வளர்க்கும் இந்தச் சிறு நரியும் ஒண்டிக் கிடக்கும். அந்த நரிக்கு மீண்டும் நாட்டாண்மை கொடுக்கவும், நமது காவலராம் கரிகாலரை வீழ்த்தி விடவும் உள்நாட்டிலேயே ஒருசில துரோகிகள் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! அவர்களின் கூட்டு முயற்சியாகத்தானிருக்க வேண்டும், இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும்" என்று காரிக்கண்ணனார் விழிகளில் கனல் பறக்கப் பேசினார்.

"செழியனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டால் என்னப்பா செய்வது?"

"அதைத்தான் நானும் கவலையோடு யோசிக்கிறேன்" என்று கூறியவாறு பூமியில் விழியோட்டிச் சிந்தனையில் ஈடுபட்டார் புலவர். சிந்தனைக்கெனச் சென்ற விழிகள், செழியன் படுத்திருந்த கட்டிலின் ஓரமாக ஏதோ ஒன்றைக் கண்டு மேலும் அகல விரிந்தன. புலவர் வேகமாகச் சென்று அந்தப்பொருளை எடுத்தார். புலி நகம் பொருத்தப்பட்ட மாலை! வேலைப்பாடமைந்த அழகிய தங்கத் தகட்டாலான அந்த மாலையின் முனையில் புலி நகங்கள் நீட்டிக்கொண்டிருந்தன. மாலையை உற்றுப்பார்த்தார்.

"இது செழியன் தன் கழுத்தில் அணிந்திருந்ததுதான்!" என்று அடையாளங் கண்டுபிடித்துச் சொன்னாள் முத்துநகை.