568
கலைஞர் மு. கருணாநிதி
568 கலைஞர் மு. கருணாநிதி மேசனசை நோக்கி, 'காண்டாமிருகத்தோடு சண்டை போட்டிடத் தயார்' என்பதாகக் கைகளினால் சைகை செய்ததுடன் தலையினை ஆட்டி ஒப்புதலும் தந்திட்டான். அந்தக் கிழட்டு வேங்கையின் உற்சாகத்தைக் கேட்டிட வேண்டுமா? பார்வையாளர்கள் அத்தனை பேருடைய கவனமும் தன் பக்கம் திரும்பி டும் வண்ணம்."யே...! நான் சொல்வதைக் கேளுங்கள்! உங்களுக் கெல்லாம் மகிழ்ச்சியினை ஊட்டிடும் மகத்தான செய்தி! இதோ! இந்தத் தமிழகத் தூதுவர் அந்தக் காண்டாமிருகத்தோடு பொருதிடப் போகிறார்!" என்று உரக்கக் கூவினார். அந்த அறிவிப்பினைக் கேட்டதும் கலையரங்கம் முழுவதும் கரவொலிகளால் அதிர்ந்திட்டது; களிப்பு வெறி பீரிட்டது. அதே சமயம் அகஸ்டசுக்கு மிகவும் நெருக்கமான செனேட்டர்கள். கவிஞர்கள், கலைஞர்கள் முதலானோர் திகைப்பிலே மூழ்கினர்; எனினும் தாங்கள் மிகச் சிறந்த மேதையெனக் கொண்டாடிடும் மேசனசே அத்தகைய ஓர் அறிவிப்பினைச் செய்திட்டதால், அவரை மறுத்துப் பேசிடவோ, எதிர்ப்புக் குரல் எழுப்பிடவோ அவர்களில் யாருக்கும் துணிவு வந்திடவில்லை. குழுமியிருந்திட்ட பல்லாயிரக்கணக்கான மக்க ளின் வேடிக்கை காணத்துடித்திடும் வேட்கை வெறியின் முன்னே, தங்கள் வார்த்தைகள் ஆற்று வெள்ளத்திலே விழுந்திட்ட அனல் பொறி களாய் ஆகிவிடலாம் என்கிற அச்சம், அவநம்பிக்கை ஆகியவையும் அவர்களது வாயினை அடைத்திருக்கலாம். லிவியா, ஜூலியா முதலான பெண்மணிகளோ அதிர்ச்சியால் தாக்குண்டு மீள முடியாமல் தத்தளித்தனர். ஜூனோவுக்கோ அணையைத் தகர்த்திடும் பிரளயமாகப் பொங்கிற்று அழுகை! அதனைத் தடுத்திடவே அவளால் முடியவில்லை; தன் இதய மொட்டே நடுநடுங்கிட, பலரும் தன்னைப் பார்ப்பார்களே என்னும் வெட்கத்திற்குக் கூட விடுதலை வழங்கிவிட்டு, அவள் விசிம்பி அழத் தொடங்கிவிட்டாள். அவளைப் பார்த்ததும், லிவியா, ஜூலியா இருவரது கன்னங்களிலும்கூடக் கண்ணீர் வழிந்திடத் தொடங்கிற்று. "நீங்கள் எதற்காக இப்படி அழுகிறீர்கள்? என்னுடைய வீரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா! இந்தக் காண்டா மிருகம் என்ன, எத்தனையோ, வேங்கைகள், சிறுத்தைகள், ஏன் சிங்கங்களையே அடக்கிவிடக் கூடிய ஆற்றல் எனக்குத் திண்ணமாக உண்டு. எங்கள் தமிழகத்திலே ஒரு சாதாரணப் பெண்ணே பாய்ந்துவரும் புலியினை முறத்தினாலேயே துரத்தி அடித்திடக் கூடிய வலிமை வாய்ந்திட்டவள்