உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590

கலைஞர் மு. கருணாநிதி


590 கலைஞர் மு. கருணாநிதி இப்போது கூறுவதை நன்றாக உங்கள் மனத்திலே பதிய வைத்துக் கொள்ளுங்கள். செழியனின் முகத்தினைக் கடைசியாக ஒரு முறையேனும் கண்டிடாமல் என் கண்கள் கண்டிப்பாய் மூடிட மாட்டா. இப்போது உடனே செழியனின் வருகைக்கு ஆவன செய்யுங்கள்." “அவனை அழைத்து வருவதற்கு யாரை அனுப்பி வைக்கலாம் என்பதனையும் மன்னர் அவர்கள் தெரிவித்திட்டால் நல்லது." ஆமாம். இங்கிருந்து சென்றிடக் கூடிய ஆள். நம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்திடல் வேண்டும். ஏனெனில், இங்கு நிலவிடும் சில நெருக்கடியான அரசியல் நிலைமைகளைப் பற்றியெல்லாம் அந்தரங்கமான செய்திகளை அந்த ஆளிடம் நான் சொல்லி அனுப்பவேண்டியுள்ளது. அச்செய்திகளை முன்கூட்டியே அறிந்திட்டால்தான் சிந்தனைக் குழப்பமின்றித் தெளிந்த நெஞ்சத்தோடு இங்கு வந்தவுடனேயே சிக்கல்கள் பலவற்றிற்குத் தீர்வு கண்டிட இயலும் செழியனால்! அதோடு அவனை அழைத்து வந்திட ரோமாபுரிக்கு செல்கின்றவர் நம்முடைய நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்திட்டால் மட்டும் போதாது; செழியனின் நல்லெண்ணத்தைப் பெற்றவராகவும் விளங்கிடல் வேண்டும். அப்போதுதான் அந்த ஆள் கூறிடக்கூறிய அந்தரங்கச் செய்திகளை அவனால் நம்பிட முடியும். அலட்சியப்படுத் திடாமல் உடனே கிளம்பிடவும் தோன்றும். ஏன் புலவர் அவர்களே, இப்படி நாம் செய்திட்டால் என்ன?" "எப்படி மன்னவா?" "தங்களுக்குத்தான் யவனக் கிழவர்கள் பலரிடமும் நெருக்கமான பழக்கம் உண்டே! அவர்களுள் நற்பண்பு வாய்ந்திட்ட ஒருவரோடு நம் முத்துநகையையே அனுப்பி வைத்திட்டால் என்ன? "அதுவும் சிறந்த ஏற்பாடாகவே அமைந்திடும்; ஆனால்.. என்றவாறே தன் மகளின் நிலை எங்ஙனம் இருந்திடுமோ என்று அறிந்திட விழைந்தவர்போல் அவளுடைய முகத்தினை நோக்கினார் புலவர். அவளோ...? "ஆனால்... என்று ஏன் இழுக்கிறீர்கள் அப்பா? நம்முடைய பாண்டிய வேந்தரின் விருப்பங்களை நிறைவேற்றுவதை விட வேறு என்னதான் எனக்கு இன்பம் அளித்திடக் கூடியதாக இருந்திடப் போகிறது? செழியன் அண்ணாவையும் நான் நன்கு அறிந்திடுவேன்; அவருக்கும் என்னைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். எனவே, அவரை அழைத்து வந்திட எனக்கு அட்டியேதும் இல்லை; இவ்வளவு நெடுந்தூரம் பயணம் செய்திட வேண்டுமே என்கிற அச்சமும் எனக்கு இல்லை."