உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596

கலைஞர் மு. கருணாநிதி


யவனக்கிழவருடன் ரோமாபுரி மண்ணை மிதித்திட்ட முத்துநகை, ஏதோ ஒரு புதிய உலகுக்கு வந்துவிட்ட உணர்வுகளால் தழுவப்பட்டு இன்பக் கிளுகிளுப்பிலே மிதந்திட்டாள். கடலின் கரம்போல் நீண்டு பாய்ந்தோடும் டைபர் நதி - தேர்ச் சப்பரம்போல் வடிவம் அமைந்திட்ட ஊசியிலை மரங்கள் - அஞ்சறைப் பெட்டிகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைத்தாற்போல் ஓங்கி உயர்ந்திட்ட கட்டடங்கள் - அவற்றுள்ளும் சேல்கெண்டை மீனின் செதில் போலப் பளபளத்திடும் சலவைக்கல் கட்டடங்கள் எல்லாமே அவளது உள்ளக் கிண்ணியிலே வழிய வழியப் பொழிந்திட்டன உவகைத் தேனை! செழியனைச் சந்திப்பதற்காகச் சென்று கொண்டிருந்த அவளை வழியிலே காண நேர்ந்திட்ட சில ரோமானியர்கள். ஒருகணம் திகைத்துப் போய்த் தேங்கி நின்றனர்; வியப்பு மின்னிடும் தங்கள் விழிகளால் அவள் உருவத்தினையே ஏற இறங்க அளந்தனர்; பின்னரே மேலே நடந்தனர். ஏன் அப்படி? முத்துநகையைப்போல் - புதுமையான முறையிலே புடவை உடுத்தியவளை - கச்சை அணிந்தவளை - கடயம் பூண்டவளை அவர்கள் இதுவரை தங்கள் நாட்டிலே கண்டதில்லை. அதனால்தான் அவர்களுக்கு அத்துணை வியப்பு - திகைப்பு! சிலர், யவனக்கிழவரை அணுகி அவள் யார்? எந்த நாட்டிலிருந்து வருகிறாள் என்றெல்லாம் வினவிடவும் தவறவில்லை. அவள் தமிழகத் துத் தளிர்க்கொடிதான் - செழியனுக்கும் உறவினர்தான் என்று அறிந் திட்டவுடனே, அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடும் மரியாதை யோடும் அவளுக்கு வணக்கம் புரிந்து வரவேற்புக் கூறினர். முத்துநகையையும் யவனக்கிழவரையும் சுமந்திட்ட சிறிய தேர், நகர்மன்றமாகிய ஃபோராத்தின் வழியாகச் சென்றிட்ட பொழுது, அங்கே அகஸ்டஸினால் புதிதாக எழுப்பப்பெற்ற கருத்தரங்க மேடையை ஒட்டி, ஏழெட்டுப் பேர் கும்பலாகக் குழுமி இருந்தனர். உரத்த குரலில் அவர்கள் எதைப்பற்றியோ உரையாடிய வண்ணமும் இருந்தனர். சூடு பறந்திடும்