602
கலைஞர் மு. கருணாநிதி
- நேரமோ ஓடிக் கொண்டிருந்தது. காலைக் கதிரவனின் பொற்கதிர்களில் சாதாரணமாகத் தவழ்ந்திடும் தாங்கிக் கொள்ளத்தக்க குடமிளகாய்க் காரம் கூட மாறி, கொதி உலையின் அனல் வீச்சும் ஏறத்தொடங்கிவிட்டது. அப்படியும் ஜூனோ வந்தபாடில்லை. முத்துநகையையாவது அனுப்பி வைத்தாளா என்றால், அதுவும் இல்லை. செழியனுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த தேர், முந்தின நாள் பழுதடைந்துவிட்டது. அதற்கு மாற்றாக இன்னொரு தேரினை அனுப்புவதாகச் சொல்லியிருந்தாள் அவள். அதுவும் வந்து சேர்ந்திடவில்லை. இவ்வாறு தேர் இல்லாமற் போனதே அவனுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்திட்டது. 'இந்த ஜூனோ என்ன இப்படிச் செய்துவிட்டாள்? நான் உடனே அகஸ்டஸ் அவர்களிடம் விடைபெற்றிட வேண்டாமா? அப்பொழுது தானே மரக்கலத்தினுக்கு ஏற்பாடு செய்துகொண்டு இன்றே தமிழகத் திற்குக் கிளம்பிட இயலும்?' என்று தவியாய்த் தவித்திட்ட செழியன் நொடிக்கு நொடி பொறுமையினை இழந்திட்டவனாய் உப்பரிகையின் தாழ்வாரப் பகுதியிலே அங்கும் இங்குமாய் உலவிய வண்ணம் இருந்தான். ஒரு 'பைன்' மரத்தின் உயரத்திற்குப் பகலவன் வான மண்டலத்தில் மேலேறிய பின்னரே முத்துநகை மட்டும் தனியே வந்து சேர்ந்தாள்! “ஏன், ஜூனோ இங்கே வரவில்லையா?" என்று பரபரப்புடன் வினவினான் செழியன். "அவள் எங்கே இப்போது வரப்போகிறாள் ? எதையோ நினைத்துக் கொண்டு சின்னக் குழந்தை மாதிரித் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருக்கிறாள்" என்றாள் முத்துநகை. "என்ன காரணமாம்?" தன் நெஞ்சிலே நிறைந்தவர்களைப் பிரிவதென்றால் யாருக்கும் அழுகை வராமல் சிரிப்பா வரும்? - நகைப்புடன் கேலியாகக் கேட்டாள் முத்துநகை.