உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636

கலைஞர் மு. கருணாநிதி


அரண்மனைக்குள் நுழைந்திட்ட செழியன் நொடிப் பொழுதில், தன்னை தன் வயதை தூதுவனாகச்சென்று திரும்பிடும் தன் பொறுப்பை, மதிப்பை - எல்லாவற்றையுமே மறந்துவிட்டான். ஏன்? தனக்குப்பின்னால் இரண்டு இளங்காரிகைகள் வந்து கொண்டிருப் பதையுங் கூட மறந்தே விட்டான். அவனுக்கு எங்கிருந்து வந்ததோ அந்தத் துயரத்தின் வெறி - ஆவேசம்! பல நாட்கள் தன் தாய்ப் பசுவினைக் காணாமல் தவித்திட்ட பச்சிளங் கன்றினைப் போல, ஒரே துள்ளலாக அவன் ஓட்டம் பிடித்திட்டான், பாண்டிய வேந்தன் படுத்துக் கிடந்திட்ட த்தினை நோக்கி. அங்கோ- யவனர்களால் பரிசாக வழங்கப்பெற்ற அழகான பாவை விளக்கு ஒன்று அமைதியாக ஒளியை உமிழ்ந்த வண்ணம் இருந்தது. வாழைப் பூவிலே முதிர்ந்து தடித்த மடல்களையெல்லாம் உரித்தபிறகு இறுதியிலே எஞ்சி நிற்குமே, முக்கோண வடிவமான மஞ்சள் வண்ணப் பூமொட்டு, அப்படித்தான் அசையா ஒளிப்பிழம்பாய், அந்தச் சுடர்கொழுந்து எரிந்தது. பெருவழுதிப் பாண்டியனின் தலைமாட்டுப் பக்கத்திலே ஏற்றி வைக்கப் பெற்ற அந்த விளக்கின் சந்தன வெளிச்சம் அவனை எட்டிப் பார்த்திட்ட போதிலும் அதனையும் மீறி அவனது சாவின் நிழலே படர்ந்து கிடந்தது. இமைக்கதவுகளோ கவிழ்ந்து கிடக்கும் பழுப்பேறிய கிளிஞ்சல் களைப் போல. மூடியே இருந்தன. வாயிதழ்களோ, செத்துப்போன கெளுத்திமீன் குஞ்சுகளாக வெளுத்துத் தொங்கும் மீசைகளுக்குக் கீழே சற்றே கிளர்ந்திருந்தன. எனினும் ஓடி ஒடுங்கிடப் போவது இப்போதோ இன்னுஞ் சற்று நேரங்கழித்தோ என்று அறுதியிட முடியாதவாறு மூச்சு மட்டும் மிகுந்த அடக்கத்தோடு இழையோடிற்று. மன்னன் படுத்துக் கிடந்திடும் கடடிலை ஒட்டி, ஒரு பக்கத்தில் சோழப் பேரரசன் கரிகாலனும், மறுபக்கத்தில் புலவர் காரிக்கண்ணனாரும் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.