உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கலைஞர் மு. கருணாநிதி


விளிம்பில் புரண்டாள். அவள் எதிர்பார்த்தபடியே அந்தப் பெண் ஓடிப் போய் முத்துநகையைக் கீழே விழாமல் பிடித்து விட்டாள்.

அதற்குமேல் முத்துநகையால் தூங்குவதுபோல் பாசாங்கு செய்ய முடியவில்லை. நன்றாக உறங்கியவள் போலக் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஆச்சரியத்தோடு சுற்றுமுற்றும் பார்த்து எழுந்து பாறையில் உட்கார்ந்தாள். எதிரே நிற்பவளைப் பரக்கப் பரக்க விழித்து வியப்போடு உற்று நோக்கினாள்.

அவளோ, தன் நீலக் குறுநயனங்கள் காலின் பெரு விரல் நகத்தில் பிரதிபலிக்குமாறு குனிந்து கொண்டு நின்றாள். அந்த யுவதியின் அழகைக் கண்டு முத்துநகை வியந்தாள். அலையெனச் சுருண்டு கிடந்த அவள் கூந்தலின் எழிலும், அம்புமுனை எனத் தக்க விழியும், கீற்று மின்னல் போன்ற கீர்த்திமிக்க இடையும் - அருவியே ஒரு பெண்ணுருக் கொண்டு அருகே வந்ததோ என எண்ணத் தோன்றும் விதத்தில் இருந்தன.

குனிந்த தலை நிமிர்வாள் எனச் சிறிது நேரம் காத்திருந்தாள் முத்துநகை. அவளோ நிலத்திற்குக் கண்களால் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இவளைக் கொண்டு ஏதாவது புதுச் செய்திகள் தெரிந்து கொள்ளக்கூடும் என்ற ஒரு ஆசையும் முத்துநகைக்கு எழுந்தது. நாட்டு எல்லைகளைக் கடந்து வெகு தொலைவிலேயுள்ள காட்டு நடுவிலே இப்படி ஒரு காரிகையைக் கண்டது பற்றிய ஆராய்ச்சிக் குழப்பம் வேறு அவளை ஆட்டிப் படைத்தது.

'இவள் யாராக இருக்கும்? பார்த்தால் நன்றாக வாழ்ந்தவளைப் போல்தானே தெரிகிறது... இவள் குடும்பம் இப்போது நொடித்துவிட்டி ருக்குமா? முகத்திலே ஏன் அத்துணைச் சோகம் கப்பியிருக்கிறது? அந்தச் சோகத்திரையையும் விலக்கிவிட்டுக் கூத்து மேடையின் தீப்பந்த ஒளிபோல ஒரு புதிய உணர்ச்சிப் பிரவாகம் அவள் வதனத்தில் படர்ந்திடக் காரணம் என்ன? என்னை அவள் காதலிக்கிறாளா? அய்யய்யோ... என்னை அவள் ஆண் மகன் என்றே நம்பிவிட்டாளா? இப்படி ஒரு விபரீதம் இந்த வேடத்தால் ஏற்படும் என்று எனக்குத் தெரியாதே! சரி. இவளைப்பற்றி எப்படி விவரம் அறிந்து கொள்வது?' என்றெல்லாம் முத்துநகையின் நெஞ்சத்தில் அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுந்தன.

"நீ யாரம்மா?" என்று கேட்டுவிட வாய் திறந்தாள். அதற்குள் திடீரென ஒரு தடை; குரல்! அவளுக்குப் பெண் குரல் என்று புரிந்துவிட்டால் என்ன செய்வது? ஆணைப் போலக் குரலை மாற்றிப் பேச அவள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இப்போதுதானே வேடம் போட்டிருக்கிறாள். போகப் போகத்தானே வேடமும் நடிப்பும் பூரணத்துவம் பெறும்!