உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

கலைஞர் மு. கருணாநிதி


புலவர் புன்னகை புரிந்தவாறு அவனை அணுகி, "சோழப் பெருவேந்தே? பெருவழுதிப் பாண்டியருக்கு அளித்துள்ள வாக்குறுதி என்ன? எப்படியும் செழியனை மீட்டுக் கொடுப்பதாகத்தானே? அதை மறந்து விடலாமா? தங்களுக்கு இருங்கோவேள் எழுதியது போலவே பாண்டிய மன்னருக்கும் ஒரு மடல் அவன் எழுதவில்லையென்று தாங்கள் எண்ணுகிறீர்களா? பெருவழுதிக்கும் இப்படியொரு கடிதம் வந்திருக்கிறது!"

"அப்படியா?" - கரிகாலனுக்கு ஒரே வியப்பு!

"ஆமாம்; பெருவழுதிப் பாண்டியன் திடீரெனத் தலைநகருக்குப் புறப்பட்டதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?"

"என்ன காரணம் புலவரே?"

"இருங்கோவேள் அவருக்கும் எழுதியிருக்கிறான்; அதாவது பாண்டியநாடு, சோழநாடு இரண்டின் நட்புரிமைக்குக் குந்தகம் உண்டாக்குவதற்காகவே இந்த ஏற்பாடு!"

"எப்படிப் புலவரே?"

"இது புரியவில்லையா! பறித்துக் கொண்ட நாடுகளைக் கொடுத்தால் செழியனைத் திரும்பத் தருவேன்; இல்லையேல் செழியனைக் கொன்றுவிடுவேன் என்பது இருங்கோவேளின் எச்சரிக்கை!"

"ஆமாம்!"

"நாடுகளைத் திரும்பக் கொடுத்துச் செழியனை ஏன் மீட்டுத் தரக் கூடாது என்று பாண்டியன் நினைக்கக்கூடும். தாங்கள் அப்படிச் செய்யாவிட்டால் பாண்டியருக்குத் தங்கள் மீது பகை ஏற்படக்கூடும். அந்தப் பகையை மூட்டிவிட்டுத் தன் சூழ்ச்சியை வெற்றி பெறச் செய்யலாம் என்பது இருங்கோவேளின் நினைவாக இருக்கும். இந்தச் சங்கடமான நிலையைச் சமாளிக்க முடியாமல்தான் பாண்டிய மன்னர் உடனடியாகத் தலைநகருக்குப் புறப்பட்டுவிட்டார்!"

"சரி.. அப்படியானால் இப்போது என்ன செய்யலாம்?"

"சூழ்ச்சியைச் சூழ்ச்சியினால் தான் முறியடிக்க வேண்டும்!"

"இருங்கோவேளின் நிபந்தனைப்படி அவனது நாடுகளைத் திரும்பக் கொடுத்துவிடுவதா?"

"நான் அவ்வாறு கூறவில்லை மன்னா! படை வீரர்களைப் பல திசைகளிலும் அனுப்பி அவனுக்குக் கோபத்தை மூட்டினால், திடீரென்று அவன் செழியனைக் கொன்று விடவும் கூடும்!"