உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கலைஞர் மு. கருணாநிதி


வளுக்கு வேலையெல்லாம் அந்தக் காட்டுப்புறத்திலேதான். காட்டின் ஓரத்திலேயே நெடுந்தூரம் சென்று குதிரையை விட்டு இறங்கி, நாலா திசையிலும் விழிகளைச் செலுத்தினாள். ஒரு பாழடைந்த மண்டபமும், அதனருகே அழகிய குளமொன்றும் இருக்கக் கண்டாள். குளிக்கலாம் போல் தோன்றியது. குளிப்பதற்கு அதுதான் பாதுகாப்பான இடம் என்று தெரிந்து கொண்டாள். குதிரையை மறைவான இடத்தில் கட்டிவிட்டு, ஆண் உடைகளை அவிழ்த்துக் கரைமீது வைத்துவிட்டுக் குளத்தில் இறங்கினாள். அந்தக் குளிர்ந்த நீர் அவளது ஆயாசத்தையும், ஏன் மன எரிச்சலையுங்கூடப் போக்கிற்று. கரையேறவே மனமின்றி நீந்தி விளையாடினாள். இன்னும் எத்தனை நாளைக்குப் பெண்மையின் பொலிவை ஆணுடைக்குள் மறைத்துத் திரியவேண்டுமோ என்ற கவலையோடு நீருக்குள்ளே மூழ்கியிருக்கும் மேனியின் அழகைத் தானே பார்த்து ரசித்துக் கொண்டாள். தன்னைப் போய் ஒருத்தி காதலிக்கிறாளேயென்று நினைத்தபோது அவளையறியாமலே சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டுச் சிரித்து விட்டாள்.

அந்த இன்பமயமான குளியலை அங்குள்ள புதர்களின் இடுக்கின் வழியாக இரு கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை. அனாயாசமாகக் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் குளித்த காட்சியைக் காண வெட்கி அந்தக் கண்கள் மூடித் திறந்தன. பிறகு அந்தக் கண்கள் நகர்ந்தன. பின்னர் அந்த இடத்தைவிட்டு கண்கள் மறைந்தன.

முத்துநகை நீண்ட நேரம் தண்ணீரில் கிடந்து ஊறிய பிறகு கரையேறினாள். எந்தவிதமான பயமும் வெட்கமும் இல்லாமல் கரையில் நின்று உடைமாற்றிக் கொண்டாள். தன் எழிலுருவை - காண்பவரை மயங்க வைக்கும் மாம்பழ உடலை - நீரில் ஆடும் தன் பிரதிபிம்பத்தைத் - தன்னைத் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை என்பது அவள் எண்ணம்.

ஆண் உடைகளைச் சரிபார்த்து அணிந்து கொண்ட பிறகு, கரையில் உள்ள மண்டபத்துக்கு வந்தாள். வந்தவள் திடுக்கிட்டாள். அங்கு ஒரு முரட்டு மனிதன், இரண்டொரு செங்கற்களை அடுக்கிய அடுப்பில் பானையை வைத்து சமையல் செய்து கொண்டிருந்தான். அவனைக்