பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

85

குடும்பம் வீணாகிவிடுமே, மனைவியும் மக்களும் மனம் வருந்தும் நிலை ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சி அவர் தயங்கினார். வீட்டிலே மேலும் மேலும் நெருக்கடிகள் விளைந்தால், அதற்குப் பிறகு ஒரேயடியாக வெளியேறி விடுவது என்றும் தீர்மானித்தார்.

டால்ஸ்டாய் தனது மனைவிக்கு 1897-ஆம் ஆண்டிலே ஓர் அஞ்சல் எழுதினார். ஆனால் அக் கடிதம் அவருக்கு அனுப்பப்படவில்லை. “நான் இறந்து விட்ட பிறகு இக் கடிதத்தை அவளிடம் அனுப்புங்கள்” என்று அந்தக் கடிதத்தின் மேல் அவர் எழுதியிருந்தார்.

“அன்புள்ள சோன்யா,

எனது கொள்கைக்கும், என் வாழ்க்கைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் எனக்கு வருத்தந்தான் அளிக்கின்றது. இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணம்? நீதான்! அதைக் கைவிடுமாறு நான் உன்னை இப்போது வற்புறுத்த முடியாது.

ஏனென்றால், இந்த மனப் போக்கில் உன்னைப் பழக்கப்படுத்தியவன் நான்தான். நம்முடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தார்கள். அவர்களது போக்கை கட்டுப்படுத்த வேண்டும் விரும்பியதுண்டு. நானும் தலையிட விரும்பவில்லை. ஆனால், நான் தலையிட்டிருந்தால், உனக்கு வருத்தமாக இருக்குமே!

அந்த அச்சம் தான் எனக்குப் பதினாறு ஆண்டுகளாக உன்னோடு சண்டையையும், சச்சரவையும் உருவாக்கி விட்டது. உனக்குக் கோபத்தை மூட்டிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்ப வாழ்க்கையை, நான் நீண்ட காலம் ஏற்க முடியாது.

இப்போது நான், எனது நீண்ட நாளைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்து விட்டேன். உங்களை