உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

வஸந்தமல்லிகா

பெயரைக் காரணப் பெயராக்கிக் கொண்டிருந்தன. மல்லிகா அந்தப் பிரம்மாநந்தமான காட்சியில் ஈடுபட்டு மெய்ம்மறந்தவளாய் படித்துறையின் ஆளோடியில் நடந்து கடைசியில் போய் நின்று தண்ணீரை நோக்கினாள். வெயிலாலும், பசியாலும், தாகத்தாலும், துக்கத்தாலும் கரைகடந்த துன்பத்தாலும் தீய்ந்து பற்றிய அவளது உடம்பில், குளிர்காற்று தாக்கியது நிரம்பவும் ஆறுதலாயிருந்தமையால் அவள் தனது சால்வையை உடம்பிலிருந்து எடுத்துச் சுருட்டிக் கையில் வைத்துக்கொண்டு நின்ற வண்ணம் கீழே குனிந்து ஜலத்தைப் பார்த்தாள். அதற்குமுன் தனது மனதிற்கு இன்பமூட்டிய பொருட்கள் யாவும் அப்போது பயனற்றவையாய்த் தனக்குக் காணப்பட்டதையும், உலகமே ஒன்றுமற்ற பாழாய்த் தோன்றியதையும் கண்டு அவள் வியப்படைந்து அவ்விதமே ஆளோடியின் கடைசியில் உட்கார்ந்து கொண்டு தனது இரண்டு கால்களையும் தண்ணிரில் தொங்க விட்டாள். அவ்விடத்தில் தண்ணீர் அவளுக்கு நிரம்பவும் சமீபத்திலிருந்ததாயினும் தரையிலிருந்து மூன்று நான்கு ஆள் உயரத்திற்கு ஜலமிருந்தமையால், அங்கு தவறி விழுந்த மனிதர் பிழைப்பது கடினம். அவ்விடத்தில் தண்ணீர், சுழல்களுடன் மிக்க வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது.

அந்த நிலைமையில் மல்லிகா இருந்தபோது, ஜனங்களுக்கு எவ்விதமான விபத்தும் நேராமல் தடுக்கும்பொருட்டு அங்கு நியமிக்கப்பட்டிருந்த போலீஸ் சேவகனொருவன், எங்கேயோ போயிருந்து அங்கு திடீரென்று தோன்றி "யார் அம்மா அது? தண்ணீர் ஒரத்தில் உட்காராதே, வா இப்படி" என்ற அதட்டிக் கூறினான். இடியோசையைப்போல திடீரென்றுண்டான அந்த அதட்டலைக் கேட்ட மல்லிகாவின் தேகம் திடுக்கிட்டு நடுங்கியது. அந்த நடுக்கத்தில், அவளது கையிலிருந்த சால்வை தவறித் தண்ணீரில் விழுந்து விட்டது. அவள் அதைக் கவனியாமல் பின்புறம் திரும்பிப் பார்த்தாள். ஆற்றின் ஒரத்தில் தான் இருப்பது பற்றி போலீஸ் வீரன் கோபித்துக் கொள்கிறான் என்பதை அறிந்து கொண்டு அவள் அவ்விடத்தை விட்டு எழுந்து வந்து படித்துறையின் வழியாக நடந்தாள். அவளது சால்வை தண்ணீரில் போனதைக் கண்ட போலீஸ் ஜெவான் அதை எடுக்கும்பொருட்டு கிழக்கு முகமாக ஓடினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/106&oldid=1231405" இலிருந்து மீள்விக்கப்பட்டது