உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடற்கரையில் கடும் போர்

201

மோக : இந்த ஊர் என் தேகத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் போகிறேன் - என்றார்.

அவர் ஊரைவிட்டுப் போக உத்தேசித்ததன் உண்மைக் காரணம் மல்லிகாவுக்கு நன்றாகத் தெரியுமாதலால், அவள் மிக்க கலக்கமடைந்தவளாய் கீழே குனிந்து கொண்டு நின்றாள். அவரது விஷயத்தில் அவளுக்குப் பெரிதும் விசனம் உண்டாயிற்று.

மோக : அடுத்த வாரம் கலியாணத்துக்கு முகூர்த்தம் பார்த்திருப்பதாக பீமராவ் தெரிவித்தான். அந்தச் சமயத்தில் நான் இருக்க மாட்டேன். ஆகையால் அதை உத்தேசித்தே இப்போது இங்கே வந்தேன். மல்லிகாவை நான் என்றைய தினம் நெருப்பி லிருந்து விடுவித்தேனோ, அன்று முதல் அவளை நான் என்னுடைய சொந்த சகோதரிக்கும் அதிகமாக மதிக்கிறேன். இங்கிருந்தால் அவளுடைய கலியாணத்தில் என்ன சிறப்புகள் செய்வேனோ அவைகளை இப்போது செய்துவிட்டுப் போக வந்தேன் - என்று சொல்லிக் கொண்டே ஒரு சிறிய காகிதப் பொட்டலத்தை எடுத்து கிருஷ்ணவேணியிடம் நீட்டினார். அவள் அதை ஆவலுடன் வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். அதில் வைர அட்டிகை ஒன்றிருந்தது. அதை மல்லிகாவும் பார்த்தாள். அவ்வளவு விலையுயர்ந்த ஆபரணத்தைக் காண, அவரிடத்தில் அவளுக்குண்டான மதிப்பிற்கு அளவில்லை.

மல்லி : எனக்கு உயிரைக் கொடுத்தது போதாதென்று; இன்னம் சிறப்பும் வேறு செய்ய வேண்டுமா? எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டதுதான் மனதிற்குச் சகிக்கவில்லை. இவ்வளவு அருமையான காரியங்களுக்கெல்லாம் நான் எப்படி உரிமை உடையவளானேன்? இத்தனைக்கும் நான் என்னுடைய நன்றியறிதலை எப்படிக் காட்டப்போகிறேன் - என்றாள். நன்றியறிதலின் பெருக்கால் கண்ணீர் தானாகப் பொங்கி கன்னங்களில் வழிந்தது.

மோக : (அன்போடு) உன்னை நான் அன்று காப்பாற்றிய பிறகு, எனக்கு உன்னுடைய க்ஷேமலாபத்தில் ஒருவித அபிமானம் உண்டாகிவிட்டது. அதனால் செய்கிறேனே ஒழிய நீ பதில் நன்றி பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. நீ எப்போதும் சௌக்கியமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/219&oldid=1233991" இலிருந்து மீள்விக்கப்பட்டது