பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

119



“கொடுங்கோளூரிலேயே அழகிற் சிறந்த பெண்ணொருத்தியைக் கடற் கொள்ளைக்காரர்கள் கொண்டுபோய் விட்டார்கள். அதை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது” என்று கூறி அன்றைக்கு இருந்தாற் போலிருந்து என்னைப் பரபரப்படையச் செய்தீர்கள்.

“அப்படி ஒன்றும் நடந்திருப்பதற்கே சாத்தியமில்லையே? ஏனென்றால் நான் அங்கிருந்து புறப்படும்போதே கொள்ளை மரக்கலங்கள் கடலில் வெகுதூரத்தில் அல்லவா இருந்தன?” என்று பரபரப்போடு உங்களைக் கேட்டேன் நான்.

“என்ன நடந்தது? எப்படி அந்தப் பெண்ணைச் சிறைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்றே தெரியவில்லை. கடற் கரைப் பக்கமாக உலாவச்சென்ற இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் பிடித்துக் கொண்டு போய் விட்டதாக நகர் முழுவதும் பரபரப்பாக இருக்கிறது என்று உறுதியாகக் கூறினிர்கள் நீங்கள்.”

“ஆம்! நான் அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள்ளேயே பதற்ற மடைந்த உன் வாயிலிருந்து 'ஆ' வென்ற அலறல் வெளிப்பட்டது. அதையும் நான் கவனித்தேன். ஏன் இவ்வளவு பதற்றமடைகிறாய் குமரா? உனக்குக் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைத் தெரியுமா? என்று கூட நான் கேட்டேன்.”

“ஆம்! நீங்கள் என்னைக் கேட்டீர்கள். ஆனால் என்னிடம் அப்போது நீங்கள் கூறியதில் ஒன்றுமட்டும் பொய். கொடுங் கோளுர் நகருக்குள் கடம்பர்கள் வரவும் இல்லை, யாரையும் கடத்திக்கொண்டு போகவும் இல்லை. அப்படி எல்லாம் ஏதோ நடந்ததாக நீங்கள் என்னிடம் ஏன் கூறினர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. கடம்பர்களை நான் வென்று அவர்கள் மரக்கலங்களைச் சோதனையிட்டதில் யாருமே அவர்களிடம் சிறைப்பட்டிருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். நீங்களோ அப்படி ஒரு செய்தியைக்கூறி என் ஆவலைத்