பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

123



தானும் அமுதவல்லியும், பூம் பொழிலில் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்தின் பின்புறத்தில் சந்தித்ததும் உரையாடியதும் எப்படி அமைச்சருக்குத் தெரிந்தன என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் மனம் மறுகினான் அவன். அமைச்சரின் அரசதந்திர விழிப்பார்வையானது கோநகரின் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து நாடு முழுவதும் பார்க்கவும், அறியவும், உணரவும் ஆற்றல் பெற்றிருப்பதை அந்த விநாடியில் அவன் தெரிந்து கொள்ள முடிந்தது. இம்முறையும் வேளாவிக்கோ மாளிகை அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையையே தந்தது.


22. படைத்தலைவனுக்குப் பரிசு

படைத்தலைவன் கடம்பர்களை வெற்றி கொண்டு துரத்திய பின் அமைச்சர் அழும்பில்வேளின் மேல் தீராத கோபத்துடன் வேளாவிக்கோ மாளிகைக்கு வந்தபின் இரண்டு நாட்கள் கழிந்து விட்டன. மூன்றாவது நாள் வைகரையில் வஞ்சிமாநகர் பரிபூரணமான விழாக்கோலம் பூண்டிருந்தது. தோரணங்கள் நிறைந்த வீதி வாரணம் பீடுநடைபோடும் பெருந்தெருக்கள், வெற்றி மங்கலம் பாடவல்ல புலவர்களும், பாணர்களும், பாடினிகளும், கூத்தர்களும், விறலியர்களும், தெருக்கள்தோறும் கூடியிருந்தனர். கீத சாலைகளில் கீதங்களின் ஒலிகள், வேள்விச் சாலைகளில் வேத முழக்கங்கள் எல்லாம் நிறைந்திருந்தன.

நகரம் எங்கும் பூக்களின் நறுமணம். இசைகளின் இன்னொலி, நடன மகளிர் காற்சிலம்புகளின் கிண்கிணி நாதம், இவையே நிறைந்து பொங்கின. மங்கலவேளையில் வடதிசைக் குயிலாலுவத்திலிருந்து கோநகர் திரும்பிய பேரரசர் செங்குட்டுவரும் பெரும் படைத் தலைவர் வில்லவன் கோதையும் சேர நாட்டுப் படை வீரர்கள் பின் தொடர்ந்துவர நகருக்குள் துழைந்தனர். நகர மக்கள் வீதிதோறும் மன்னரையும் படைத் தலைவரையும் வாழ்த்திய வாழ்த்தொலி விண்ணதிர ஒலித்தது.