பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வஞ்சிமாநகரம்


 “பார்த்தீர்களா? அதில் கூட ஆண்களுக்குத்தான் அதிக உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. பெண்களைத்தான் கவனிப்பார் இல்லை !”

“ஏன் இல்லை? அதற்குத்தான் ஆண்கள் இருக்கிறார்களே? நாங்கள் புகழுவதற்காகவும் நலம் பாராட்டுவதற்காகவும் தானே நீங்கள் எல்லாம் அழகாகப் படைக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று கொடுங்கோளுர்க் குமரன் நம்பி கூறியபோது அமுதவல்லியின் முகத்தில் நாணம் விளையாடியது. சிறிது நேர உல்லாச உரையாடலுக்குப்பின் அவர்கள் பிரியவேண்டிய வேளை வந்தது.

“நாளைக்கு இதே வேளையில் இங்குவர மறந்து விடாதே! ஊரெல்லாம் ஆந்தைக்கண்ணன் பயமாயிருக்கிறதே என்று பேசாமல் இருந்து என்னை ஏமாற்றிவிடாதே. உன் தந்தையார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார். எங்கே இரத்தினங்களையெல்லாம் ஆந்தைக்கண்ணன் வாரிக்கொண்டு போய்விடுவானோ என்று அவருக்குக் குடல் நடுங்கும். உன்தந்தை தன்னிடமுள்ள எல்லா இரத்தினத்தைப்பற்றியும் கவலைப்படட்டும். ஆனால் ஒரே ஒர் இரத்தினத்தைப் பற்றி மட்டும் அவர் கவலைப்படுவதை விட்டு விடலாம்.”

“எந்த இரத்தினத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள்?”

“புரியவில்லையா? இதோ என் எதிரே நின்று பேசிக் கொண்டிருக்குமிந்த அழகு இரத்தினத்தைப் பற்றித்தான் சொல்லுகிறேன்” - என்று அவள் பூங்கரத்தைப் பற்றினான் குமரன். பின்பு மெல்லிய குரலில் அவள் செவியருகே நெருங்கிக் கூறலானான்: “என்னைப் பொறுத்தவரை அவர் பெற்றிருக்கும் இரத்தினங்களில் உயர்ந்ததும் விலை மதிப்பற்றததும் இதுதான்.”

“அதிகம் புகழ வேண்டாம். நான் நாளைக்கு அவசியம் வருகிறேன்” - என்று நாணமும் மென்மையும் இழைந்த நளினக் குரலில் கூறியபடி அவனிடமிருந்து தன் கரங்களை