பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. மரக்கலங்கள் எங்கே?

குமரன் நம்பியும் அவன் நண்பர்களான படைக் கோட்டத்து வீரர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அடுத்த நாள் இரவும் வந்தது. பொன்வானி முகத்துவாரத்தில் அவர்கள் புறப்பட்டுச் செல்வதற்குப் படகுகள் வரிசை வரிசையாகக் காத்திருந்தன. படகுகளைப் படைக் கோட்டத்து வீரர்களே செலுத்திக் கொண்டு போவதில் சில இடையூறுகள் இருந்தன. ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்தவுடன் படகுகளில் இருக்கும் வீரர்கள் தாங்கள் எந்தக் காரியத்தைச் செய்ய வந்தார்களோ அந்தக் காரியத்தைச் செய்வதற்காகப் படகுகளிலிருந்து நீங்கிச் சென்றால் அவர்கள் மறுபடி திரும்பி வருகிறவரை உரிய இடத்திலே, தப்பித் திரும்பிச் செல்வதற்குப் படகுகள் நிறுத்தப் பட்டிருக்க வேண்டுமென்று கருதிப் பொறுப்பு வாய்ந்த படகோட்டிகளை உடன் அழைத்துச் செல்ல ஏற்பாடாகி இருந்தது அன்றைக்கு.

மேலும் அன்றிரவு அவர்கள் திட்டமிட்டிருந்த சூழ்ச்சியைப் போய் நிறைவேற்றுவதற்கும், நிறைவேற்றி விட்டுத் திரும்பி வருவதற்கும் - சந்தர்ப்ப வேகத்தையும், அவசரத்தையும் உணர்ந்து அதற்கேற்றபடி படகைச் செலுத்துவதற்கும் அவசியம் இருந்தது. அதனால் கடலில் எந்த நிலையிலும் படகு செலுத்துவதில் சூரர்களான படகோட்டிகள் சிலரை முன் கூட்டியே துணைக்கு ஏற்பாடு செய்திருந்தான் குமரன் நம்பி. படகுகள் நடுச் சாமத்திற்குக் கடலுக்குள் செல்ல வேண்டுமென்பது ஏற்பாடு. அதற்குமுன் குமரன் நம்பியும் படைக்கோட்டத்து வீரர்களும் பொன்வானிக்கரைப் படகுத் துறையில் கூடி விட்டார்கள். அந்த இருளில் தீப் பந்தங்களின் ஒளியில் மரங்கள் அடர்ந்து அமைதி நிறைந்த பொன்வானிக் கரையில் மனிதர்கள் கூடி நிற்பது ஏதோ அசாதாரணமான காரியங்கள் நிகழப்போகின்றன என்பதை அறிவிப்பது போலிருந்தது. ஒவ்வொரு படைக்கோட்டத்து வீரனின் முகத்திலும் கண்களிலும் செய்யப்போகிற காரியத்தைப்