பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

தமிழ் நாவல்களைச் ‘சரித்திர நாவல்கள்’, ‘சமூக நாவல்கள்’ என்று, இரு பெரும் பிரிவாகப் பிரிப்பது தற்காலத்தில் பெரு வழக்காயுள்ளது. எது சரித்திர நாவல், எது சமூக நாவல் என்று நிச்சயிப்பதற்கு ஒரு தெளிவான விளக்கம் இல்லாவிடினும், சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளையும், அக்காலச் சூழ்நிலையையும் மையமாக வைத்து எழுதப்படுவது சரித்திர நாவல் என்றும், தற்கால நிகழ்ச்சிகள், சமுதாயச் சூழ்நிலை இவற்றை மையமாகக் கொண்டு எழுதப் பெறுவது சமூக நாவல் என்றும் பொதுவாகக் கருதப் பெறுகிறது.

வரலாற்றுச் செய்திகளை முறையாகத் தொகுத்து ஒழுங்குபடுத்தி எழுதி வைக்கும் பழக்கம் நம்மவர்களிடையே இருந்ததில்லை. வரலாற்றுச் செய்திகளை அறிவதற்கு கர்ணபரம்பரைக் கதைகளையும், கல் வெட்டுகளையும், இலக்கியங்களையுமே நாம் பெரிதாக நம்பவேண்டிய நிலையில் இருக்கிறோம். இலக்கியங்களும் வரலாற்றுச் செய்திகளைத் தெளிவாக அறுதியிட்டுக் கூறுவதில்லை. சுவை மிகு இலக்கியங்களின் நடு நடுவே வரும் குறிப்புகளைக் கொண்டுதான் வரலாற்றுச் செய்திகளையறிய வேண்டும்.

இலக்கியங்களில் வரும் குறிப்பைக் கொண்டு வரலாற்றுச் செய்திகளைச் சேகரிப்பதற்குப் பழந்தமிழ் இலக்கியத்தில் பரந்த அறிவும் ஆழ்ந்த புலமையும் வேண்டும். இந்த இரண்டும் நிறையப் பெற்றவர் ஆசிரியர் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள்.