பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. அமைச்சரின் சிந்தனைகள்

இரவோடிரவாகக் கடலுக்குள் சென்ற குமரன் நம்பியுடன் உடன் துணைசென்றவர்களும் திரும்பவில்லை என்பதோடு கொள்ளைக்காரர்களின் மரக்கலங்கள் கொடுங்கோளுரை நெருங்கிவிட்டன என்பதும் அமைச்சர் அழும்பில்வேளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. உடனே அவர் அதிகப் பரபரப்படைந்து விடவில்லை என்றாலும் வேளாவிக்கோ மாளிகையில் ஓர் மந்திராலோசனை நிகழ்த்தினார்.

“குமரன் நம்பியும் அவனுடைய கொடுங்கோளுர் படைக் கோட்டத்து வீரர்களும் கொள்ளைக்காரர் முற்றுகையை முறியடிக்கத் தவறினால் அடுத்து என்ன ஏற்பாடு செய்வதென்று இப்போது நாம் சிந்திக்க வேண்டும்?” என்று அமைச்சர் கூறியபோது சேரநாட்டு அரசவையோடு பெருந்தொடர்புடைய வஞ்சிமாநகரத்து மூதறிஞர் சிலர் குமரன் நம்பியின் குறைந்த ஆற்றலையும் இளம் பருவத்தையும் குறைவாக மதிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்தார்கள். முற்றுகையிலிருந்து சேரநாட்டுக் கடற்கரை நகரங்களை மீட்கும் பொறுப்பைக் குமரன்நம்பியைப் போன்ற ஓர் இளைஞனிடம் ஒப்படைத்தது தவறு என்று கூட அவர்களில் சிலர் கருதுவதாகத் தெரிந்தது.

“பெரும்வீரரும் பெரும்படைத் தலைவரும் மாமன்னரோடு வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் குமரன்நம்பியைத் தவிர வேறெவரும் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் எல்லாக் காரியங்களையும் வயது முதிர்ந்தவர்களே நிறைவேற்றித் தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில காரியங்களை வயது முதிர்ந்தவர்களைவிட இளைஞர்கள் ஆர்வத்தோடு நிறைவேற்றித் தரமுடியும். இது அப்படிப்பட்ட காரியமோ இல்லையோ? நான் இதை அப்படிப் பட்ட காரியமாக ஆக்கியே குமரன் நம்பியை அனுப்பி வைத்திருக்கிறேன்” என்றார் அழும்பில்வேள்.