பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வஞ்சிமாநகரம்



வேகத்தோடும்தான் திரும்பிச் சென்றிருந்தான் என்பதை அனுமானித்திருந்தார் அவர். அந்த அனுமானம் பொய்யாகாதென்றாலும் போர்க்களச் சூழ்நிலையில் மனிதர்களை மீறியும் காரியங்கள் நடைபெற முடியும்-என்றும் எண்ண முடிந்தது.

குமரனைப்பற்றிய எந்தச் செய்தியும் தெரியவில்லை என்று தெரியவந்ததும், ‘கொள்ளை மரக்கலங்களை வளைத்துப் பிடித்துத் தாக்கவேண்டும் என்பதையும் துரத்த வேண்டும் என்பதையும்விட அந்த மரக்கலங்களில் ஏதாவதொன்றில் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி சிறைப்பட்டிருப்பதாகக் கருதி அவளை முதலில் மீட்பதே தன் கடமை என்ற எண்ணத்தில் செயல்பட்டு அதன் காரணமாகவே குமரன் அகப்பட்டுக்கொண்டிருப்பானோ’ - என்றும் உய்த்துணர முடிந்தது அமைச்சரால். ஆனாலும் அவர் அயர்ந்து விடவில்லை. நம்பிக்கையோடு வேளாவிக்கோ மாளிகையிலிருந்த வேறொரு வீரன் மூலம் - கொடுங்கோளுருக்குக் கட்டளைகளை அனுப்பினார்.

‘குமரனும் அவனோடு சென்றவர்களும் திரும்பவில்லை என்பதற்காகக் கலங்கவேண்டாம். எந்தச் சமயத்தில் மகோதைக் கரையில் எந்தப் பகுதியிலிருந்து - கடம்பர்களின் மரக்கலங்கள் நகரத்தைக் கொள்ளையிட நெருங்கினாலும் அந்தப் பகுதியின் கரைப்பகுதியில் எல்லாவிதங்களிலும் எதிர்த்துத் தாக்கவும், தடுக்கவும் ஆயத்தமாக இருக்குமாறு - செய்திகள் தெரிவிக்கப் பட்டிருந்தன. கொள்ளைக்காரர்கள் மகோதைக்கரை நகரங்களில் ஊடுருவதற்குக் காரணமான இடங்களாகப் பெரும்பாலும் பொன்வானி, ஆயிரை பேரியாறு போன்ற ஆறுகளின் முகத்துவாரங்களே பயன்படக் கூடுமாதலால் அந்த முகத்துவாரங்களில் காவலையும் கட்டுத் திட்டத்தையும், விழிப்பாகச் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்திருந்தும், வேளாவிக்கோ மாளிகையிலிருந்த அமைச்சர் அழும்பில்வேளுக்கு மன நிம்மதியில்லை. உள்ளம் ஒரு விநாடிகூட விடுபடாத சிந்தனைகளில் மூழ்கியிருந்தது.