பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வஞ்சிமாநகரம்



நம்பவில்லை. குமரனோடு வந்திருந்த சேர நாட்டு வீரர்களே அவனுடைய இந்தச் சொற்களைக் கேட்டு அவனை வெறுப்பு உமிழப் பார்த்ததையும், காறித் துப்பியதையும் கண்ட ஆந்தைக் கண்ணன், இவன் இனத்து வீரர்களே இதற்காக இவனை வெறுப்பதால் இந்தத் துரோகத்தை உயிருக்குப் பயந்து கொண்டு இவன் உண்மையில்தான் செய்ய முன்வருகிறான் போலும் என்று தன் மனத்துக்குள் நினைத்தான். எந்த எதிரியை அவனுடன் உள்ள அவன் இனத்தவரே வெறுப்பதாகக் தெரிகிறதோ அந்த எதிரியைத் தனக்கு நண்பனாக்கிக் கொள்ள முடியும் என்ற முடிவுக்கு ஆந்தைக்கண்ணன் வந்த பின் அவன் குமரனைத் தன் இனத்தவராகிய கடம்பர்களோடு பொன்வானி முகத்துவாரத்திற்கு நிலைமை அறிந்து வர அனுப்பி வைப்பது என்று முடிவு செய்து கொண்டுவிட்டான்.

“உன் இனத்தவருக்குத் துணிந்து இப்படி துரோகம் செய்ய முன்வருகிற நீ அடுத்த விநாடியே எனக்கும் துரோகம் செய்யத் துணியமாட்டாயே?” என்பதுபோல் ஒரு வினாவை இரண்டு மூன்று முறை குமரனிடம் ஆந்தைக்கண்ணன் வினவினான்.

என்றாலும் குமரனைத் தன் காரியத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதென்ற தீர்மானம் ஆந்தைக்கண்ணனின் அந்தரங்கத்தில் ஏற்பட்டுவிட்டது. குமரனோடு சேர்த்து சிறைப் பட்ட மற்ற வீரர்களை வைத்துக்கொண்டு குமரனை மட்டுமே தன் ஆட்களோடு ஆற்று முகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஆந்தைக்கண்ணன் செய்யலானான்.

ஆந்தைக்கண்ணனின் மாபெரும் கொள்ளை மரக்கலத்தின் அருகே சிறு படகு ஒன்றும் வந்து நின்றது. சுற்றிலும் படகில் தன் ஆட்களாகிய முரட்டுக் கடம்பர்களை அமரச் செய்து நடுவே குமரனை இருக்கச் செய்யவேண்டும் என்று நினைத்தான் ஆந்தைக்கண்ணன். குமரனின் காது கேட்கவே தன் ஆட்களிடம் அவ்வாறு கூறவும் செய்தான்.