பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வஞ்சிமாநகரம்



அவர்களுடைய வெறுப்பையோ, விரக்தியையோ பொருட்படுத்தாமல் கடம்பர்களோடு ஆற்று முகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டான். போகும்போது தன்னுடன் வந்த சேர வீரர்களை நோக்கி, ‘போர்க்களத்திலும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் குறிப்பறிதல் மிக மிக அவசியம்’ என்று கூறிய வாக்கியத்துக்கு என்ன அர்த்தம் எனப் புரிந்து கொள்ள முயன்றனர். குமரன் நம்பி அந்த வாக்கியத்தை எதற்காக என்ன பொருளில் தங்களை நோக்கி கூறிவிட்டுச் சென்றான் என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் பெருமுயற்சி செய்ய வேண்டியிருந்தது.

கரையை நோக்கிப் புறப்படுவதற்கு முன் குமரன் நம்பி வேண்டிக் கொண்டிருந்தபடி அவனுடைய கைகளைப் பிணித் திருந்த கட்டுக்களை அவிழ்த்து விடுமாறு ஆந்தைக்கண்ணன் கட்டளையிட்டான், கட்டளையிட்டவன் குமரனிடம் எச்சரித்தான்.

“உன் உதவியை நாடுகிற சமயத்தில் கைகளைப் பிணித்துச் சிறை வைத்துக் கொண்டு நாடக்கூடாதென்று சற்று முன் நீ கூறினாய்! அதனால் உன் கட்டுக்களை அவிழ்க்கச் செய்து விட்டேன். இந்த நிலையை நீ தவறாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றால் உயிரோடு தப்பமாட்டாய் என்பதை மட்டும் நினைவு வைத்துக்கொண்டால் போதும்.”

"நான்தான் அப்பொழுதே கூறினேனே கடம்பர் தலைவரே! உங்களை எதிர்த்து யாராலும் நயவஞ்சகம் புரிய முடியாதென்பது எனக்குத் தெரியாதா என்ன? எதைச் செய்ய வேண்டுமோ அதை நான் அவசியம் செய்வேன் என்ற நம்பிக்கையோடு என்னை அனுப்புங்கள்” என்றான் குமரன் நம்பி.

படகு கரையை நோக்கிப் புறப்பட்டது. குமரன் நம்பியைக் கட்டவிழ்த்து விட்டு விட்டாலும் படகில் அவனைச் சுற்றி வாளேந்திய முரட்டுக் கடம்பர்கள் அமர்ந்து கொண்டார்கள்.