பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

69



அவர்களோ எண்ணிக்கையில் ஐவர். அவனோ ஒருவன். அவர்களிடம் கருவிகளும் படைக்கலங்களும் இருந்தன. அவனோ வெறுங்கையனாக ஆக்கப்பட்டிருந்தான். கரை நெருங்க குமரன் நம்பியின் சிந்தனை விரைவாக வேலை செய்தது. கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களிலேயே சிறைப்பட்டுத் தங்கிவிட்ட தன் நண்பர்கள் வேறு தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களே என்ற கவலையும் அவன் மனத்தில் இருந்தது.

கரைக்கு அருகில் வந்ததும் படகில் அவனைச் சூழ இருந்த கடம்பர்கள் அவனைச் சுற்றி நெருக்கமாக வலை பின்னினாற் போல இன்னும் நெருக்கமாக உட்கார்ந்தார்கள். அவனிடம் கேள்விகளையும் கேட்கத் தொடங்கினார்கள்.

“முகத்துவாரத்தை ஒட்டியோ, கரை ஓரத்திலோ எங்கும் சேரநாட்டுப் படைவீரர்கள் ஆயுதங்களோடு மறைந்திருப்பார்களோ? உள்ளதைக் கூறு. எங்களிடம் எதையாவது மறைத்துப் பொய் கூறினாயோ உன் உயிர்தான் போகும்...”

“சேர நாட்டில் இப்போது வீரர்கள் இருந்தால்தானே மறைந்திருந்து உங்களைத் தாக்க முடியும்? சேர நாட்டில்தான் இப்போது வீரர்களே இல்லையே? எல்லா வீரர்களும் வடக்கே குயிலாலுவப் படையெடுப்பில் அல்லவா இருக்கிறார்கள்?” என்று குமரன் நம்பி அவர்களுக்கு மறுமொழி கூறினான்.

“ஆற்றுமுகத்திலிருந்து நகரத்திற்குள் போகும் நீர் வழியின் இருபுறமும் ஒரே மரஞ் செடி கொடிகளாகப் பசும் புதர் அடர்ந்திருக்கும் அல்லவா?”

“ஆமாம்! அடர்ந்திருக்கும்”

“அந்தப் புதர்களிடையே ஆற்றுக்கால் வழியே படகில் நாம் சென்று திரும்ப இடையூறு எதுவும் கிடையாதே?”