பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. கடம்பன் ஏமாறினான்

கடலுக்குள் சென்று ஆந்தைக்கண்ணனைச் சந்திக்க முன்வந்த ஒற்றனுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் தானே அருகிலிருந்து கவனித்துச் செய்தான் குமரன் நம்பி.

“எப்படியெப்படி எல்லாமோ ஆந்தைக்கண்ணன் உன்னைச் சோதனை செய்வான். முதலில் செவிட்டூமையாக நீ நடித்தால் கடைசிவரை அப்படியே நடித்துவிட வேண்டும். அவ்வாறின்றி அவன் திடீரென்று ஏதாவது இரைய அதைக் காதில் வாங்கிய வேகத்தில் ஊமையாக நடிக்க வேண்டியதை மறந்து உணர்ச்சி வசப்பட்டு மறுமொழி பேசிவிடக்கூடாது.

“நீ கொண்டுபோகிற ஒலையிலேயே இந்த ஒலை கொண்டு வருகிறவன் செவிட்டூமை என்று குறிப்பிட்டிருப்பதனால் நீ கவனமாயிருக்க வேண்டும். அங்கே ஆந்தைக்கண்ணனுடைய மரக்கலத்தில் சிறைப்பட்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்த உடனே உணர்ச்சிவசப்பட்டு நீ எதையாவது பேசிவிடக் கூடாது. நீ தூதனாக வந்திருக்கிறாய் என்று தெரிந்தால் நம்மவர்கள் உன்னை நிச்சயமாக ஆந்தைக்கண்ணனிடம் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். நீயும் பிறர் புரிந்து கொள்ளாதவாறு நம்மவர்களுக்கு நீ அவர்களுக்கு உதவி, அவர்களை மீட்டுக் கொண்டு போக வந்திருப்பதாகவே ஏதேனும் சைகை காட்ட முடியுமானால் நல்லது. அந்தச் சைகையை ஆந்தைக்கண்ணன் பார்த்து விடக்கூடாது. பார்த்தால் அவனுக்கு உன்மேலேயே சந்தேகம் வந்து உன்னைக் கண்டம் - துண்டமாக வெட்டிப் போட்டு விடுவான். கவனமாகப் போய்வா” - என்று கூறித் துதுவனை வழியனுப்பி வைத்தான் அவன். துதுவனோ புறப்படு முன்பாகத் திடீரென்று வேறெரு கேள்வி கேட்டான்.

“ஐயா எனக்கொரு சந்தேகம். இந்த ஒலையை நான் ஆந்தைக் கண்ணனிடம் கொடுத்தவுடன் நீங்கள் நினைப்பது போல அவன் என்னையும், சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளுர் வீரர்களையும்