பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

93



புதியதாகவும் பெரியதாகவும் இருந்தது. ஏதோ ஒரு பயம், அல்லது இயல்பற்றநிலை நாடு முழுமையும் பற்றி ஆட்டிக் கொண்டிருப்பதை அவன் உணர முடிந்தது. ஒரு வகையில் அந்த அமைதி அவனுக்குப் பயன்பட்டது. புரவியை மிக வேகமாகச் செலுத்திக் கோநகரத்தைக் குறுகிய நேரத்தில் அடைவதற்கு அந்த அமைதி உதவுவதாக இருந்தது.

வேளாவிக்கோ மாளிகை நெருங்க நெருங்க - அந்த அரசதந்திர மாளிகையை அணுகும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் தயக்கமும், மனப்பதற்றமும் இன்றும் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டன.

வேளாவிக்கோ மாளிகைக்கு அதற்கு முந்திய முறை செல்ல நேர்ந்த சூழ்நிலையையும் இன்று செல்கிற சூழ்நிலையையும் சேர்த்து நினைத்தபோது சென்றமுறையைவிட இந்த முறை அது இன்னும் சூழ்ச்சியும் அந்தரங்கங்களும் அதிகமாகிவிட்ட இடம் போல் மனத்திற்குள் ஒரு பிரமை ஏற்பட்டது.

தோட்டத்தில் புகுந்து புரவியைக் கட்டிவிட்டு அவன் அந்த மாளிகையில் நுழையும்போது மேல்வானத்தில் மாலையைப் போலவே அவன் மனமும் குழம்பிக் கலங்கிப்போய்த்தான் இருந்தது.

அரண்மனையின் மற்ற பகுதிகளில் அந்தி விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். கீதசாலைகளில் மகளிர் முணுமுணுக்கும் இனிய பண்ணொலிகள் அரண்மனை அந்தப்புரப் பகுதியிலிருந்து வேளாவிக்கோ மாளிகைச் சுவர் வரை எதிரொலித்தது. அதற்கப்பால் அந்த அரசதந்திர மாளிகைக்குள்ளே நுழைய அஞ்சுவதுபோல் வந்த வழியே திரும்பிவிடுவது போல் தோன்றியது குமரன் நம்பிக்கு.

அமைச்சரை அணுக இசைமுதலிய நளின கலைகளுக்குக்கூட அச்சம் போலிருக்கிறது. வேளாவிக்கோ மாளிகையை நெருங்க மனிதர்கள் பயப்படுவார்கள் என்றால் இசையின் ஒலிகூடப் பயப்