பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

எம்.கோபாலகிருஷ்ணன்,

தலைவர், இந்தியன் வங்கி


அன்று வாஷிங்டனில் திருமணத்தை நடத்திய சாவி அவர்கள், இன்று வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு என்று என்னையும் அழைத்தபோது, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.

காரணங்கள் இரண்டு.

தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர் அவர்கள்தான் வடம் பிடித்து, தேரோட்டத்தைத் துவக்கி வைக்கப் போகிறார்கள் என்பது ஒன்று.

மற்றொன்று, தமிழ்நாட்டைப் போலவே ஜப்பானும் கலாசாரப் பெருமை படைத்த நாடு; அன்று வாஷிங்டனில் மேலை நாட்டுக் கலாசாரத்தோடு மாலை மாற்றிக் கொண்ட தமிழ்க் கலாசாரம், இன்று கீழை நாட்டுக் கலாசாரத்தோடு கைகோத்து ஊர்வலம் வருவது நமது கலாசாரப் பெருமைக்குச் சிறப்பு சேர்ப்பதல்லவா!

இத்தகையதொரு கலாசாரப் பரிவர்த்தனையைக் காட்டும் இந்நூல், சுற்றுலா ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்வாண்டில் வெளியிடப்படுவது மிகப் பொருத்தம். சாவி அவர்கள் இந்நூலில் கலாசாரப் பரிவர்த்தனைக்கு எத்துணை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதும், அவரது 'கனவுலகில் எவ்வளவு பெரிய எதிர் பார்ப்புகள் உள்ளன என்பதும் அவரது எழுத்துக்களில் அழகாக வெளிப்படுகிறது.

"ஆமாம்; வடம் பிடிச்சு இழுக்க ஆயிரக்கணக்கான பேர் தேவைப்படுமே ஜப்பான் காரங்களால முடியுமா? நம்மோடு சேர்ந்து இழுப்பாங்களா?"