பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 லட்சாதிபதி கிறார்கள். ஒரு வேளை தன் செல்வம்- காலமெல்லாம் கஷ் டப்பட்டு காலண, காலணாவாக (காலணா காலத்தி லிருந்து செட்டியாரிடம் இருப்பு வளர்கிறது) சேர்த்த பணத் தைக் கண்டுபிடித்து விட்டார்களானால்? ஏது இவ்வளவு தொகை? கணக்கு எங்கே? எவ்வளவு விற்பனை வரி கட்டு கிறீர்? வருமான வரி கட்டுவது உண்டா? இன்னும் என் னென்ன கேட்பார்களோ? கேட்டால் கேட்டு விட்டுப் போகி றார்கள் என்று விட்டுவிட முடியாது. இந்தக் கேள்விகளுக்குச் செட்டியார் என்ன பதில் சொல்ல முடியும்? விற்பனை வரி, வருமான வரி என்பது எல்லாம் அவரைப் பொருத்தமட்டில் ஒரு பொருளும் இல்லாத சொற்களாக இருந்து வருகின்ற னவே! என்ன சொல்வார்? சொல்வது கிடக்கட்டும். கண் டெடுக்கும் பணத்தை என்ன செய்கிறார்கள் என்பதை 'பேப்பர்காரன்' போடவில்லையே. ஒரு வேளை, அதைப் பறி முதல் செய்து விடுவார்களோ? இன்ன திசைதான் என்று இல்லை; பலவாறு சென் றது செட்டியாரின் சிந்தனை. அன்று வியாபாரத்தில்கூட அவரால் அதிகக் கவனம் செலுத்தவில்லை; செலுத்த முடிய வில்லை. வீசை, மூன்று ரூபாய்க்குச் சர்க்கரை கேட்டவர் களுக்குக்கூட 'இல்லை' என்றே சொல்லிவிட்டார். வீடு பற்றி எரிகிறது; இப்போதுபோய் பீடிக்கு நெருப்பு கேட்கிறார்களே என்ற எரிச்சல்செட்டியாருக்கு. சரியாகச் கடையை மூடிக் கொண்டு வீட்டுக்குப் போன பிறகும் செட்டியாரின் மனம் அமைதியடையவில்லை. சாப்பிடவில்லை. என்ன காரணம் என்று மனைவியும் கேட்க வில்லை. கேட்டால்தான் செட்டியார் சொல்வாரா என்ன? அதோடு வேலைக்காரியிடம் சொல்லி அனுப்பிய சாமான்கள் வரவில்லையே என்ற ஏக்கம் வேறு அந்த அம்மாளுக்கு. இரவு முழுதும் செட்டியார் தூங்கவில்லை. எப்படித் தூங்க முடியும்? கணக்கு, பணம், சோதனை, கேள்வி, விசாரணை- இதுவே அவருக்கு விசாரமாக இருந்தபோது எங்கிருந்து தூக்கம் வரும்?