பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உள்ளே முழுக்க முழுக்க ஆங்கிலப் பாணியில், விரிப்புகள், விளக்குகள், இருக்கைகள்!

வேலையாட்கள், ஜெமீன் மரபினைக் காட்டும் தனி உடையுடன் இருந்தனர்.

சடையப்பன்கூட, சாதாரணக் காலத்தில் எப்படி உடை அணிந்திருந்தாலும் ஜெமீன்தார் கிளம்பும்போது, தனி உடை அணிந்து கொண்டுதான் – வண்டியை ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது ஏற்பாடு.

வண்டி, இவருக்காகவே தனியாகத் தயாரிக்கப்பட்டது – இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டு.

தரமான குதிரைகளை வாங்கி வளர்ப்பதில், அலாதியான விருப்பம் ஜெமீன்தாரருக்கு.

கொடுமைக்காரர் என்ற பெயர் இல்லை; ஆனால் எல்லோரையும் சமமாகப் பாவித்து நடத்துபவர் என்றும் சொல்லிவிட முடியாது.

கட்டிவைத்து அடிப்பது, கொளுத்தி அழிப்பது போன்ற கொடுமைகள் கிடையாது, ஆனால் அவர் எதிரே வருபவர்கள், மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும், மரியாதைக்காக! ஜெமீன் சாரட்டு வருகிறது என்றால், எழுந்து நிற்கவேண்டும். இப்படிப்பட்ட கட்டு திட்டங்களைக் கண்டிப்புடன் வைத்துக் கொண்டிருந்தார்.

மகன் இல்லாததால், தன் இரண்டு குமாரிகளையும், ஜெமீனை நடத்திச் செல்லக்கூடிய அறிவாற்றல் கிடைக்கும்படிப் பார்த்துக்கொண்டார்.

பெரிய இராஜகுமாரி – இளைய ராஜகுமாரி என்றுதான் ஊரார் அழைப்பார்கள், பெண்களை.

எல்லா விதத்திலும் மிக்க மகிழ்ச்சியாக இருந்து வந்த ஜெமீன்தாரருக்கு ஒரு மனக்குறை ஏற்படுத்தவே பிறந்ததுபோல அவருடைய மருமகன் காளிங்கராயர் விளங்கினார்.